வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வானவர் கோமான் ஜிப்ரீலும் வந்தாரே இவர் வடிவத்திலே...!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா(ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார் (தெரியுமா)?' என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா(ரலி), 'இவர் (தங்களின் தோழர்) திஹ்யா' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா
அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்கள்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியேற்றீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து' என்று பதிலளித்தார்கள். நூல்; புகாரி
 
மேற்கண்ட பொன்மொழியில் வானவர் கோமான் ஜிப்ரீல்[அலை], திஹ்யா[ரலி] அவர்கள் உருவத்தில் வந்துள்ளார்கள். ஜிப்ரீல்[அலை] அவர்கள் மனித உருவில் வந்ததாக ஹதீஸ்கள் சில இருந்தாலும், உறுதியாக  ஒரு நபித்தோழர்  வடிவில் வந்த சிறப்பை பெற்றவர் திஹ்யா[ரலி] அவர்களாவார்.
 
மேலும் இந்த திஹ்யா[ரலி] அவர்கள் நபியவர்களின் நம்பிக்கைக்கு பத்திரமான நபித் தோழராவார். ஹெர்குலிஸ் மன்னருக்கு நபி[ஸல்] அவர்கள் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை கொண்டு செல்லும் பாக்கியம் பெற்றவரும் இந்த திஹ்யா அல் கல்பீ[ரலி] அவர்களே!
 
அடுத்து கைபர் யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்ட அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி] அவர்கள், திஹ்யா[ரலி] அவர்களுக்கு போர்ச் செல்வங்களின் பங்காக சேர்ந்தார்கள். பிறகு நபி[ஸல்] அவர்கள் அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி]யை  மணக்க விரும்பி திஹ்யா[ரலி] அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க, மறுக்காமல் வழங்கிய மனமுடையவரும் இந்த திஹ்யா[ரலி] அவர்களாவர்.
 
அல்லாஹ் திஹ்யா[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

இம்மையின் கவனம் மறுமையை பாதிக்குமா? கவலை கொண்ட ஹன்ழலா[ரலி].

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில்
ஒருவரான ஹன்ழலா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;
 
(ஒருநாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து ''ஹன்ழலா எப்படி
இருக்கிறீர்கள்'' என்று கேட்டார்கள். நான் ''ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு. ''அல்லாஹ் தூயவன்! என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ''நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில்
இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும், குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம்,
பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்'' என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான் ''அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''என்ன அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகில் இருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும்
துணைவியருடனும் குழந்தைகளுடனும் கலந்துறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால் உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும்
வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கைகுலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலாவே!  (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்'' என்று மூன்று முறை கூறினார்கள். நூல் - முஸ்லிம் எண்; 5305


மேற்கண்ட பொன்மொழியில் இரு சிறந்த நபித் தோழர்கள்களான அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] ஆகியோர் அமல்களில் சிறந்தவர்கள், அல்லாஹ்வின் அச்சத்தில் சிறந்தவர்கள். எனினும் அல்லாஹ்வின் தூதரோடு  இருக்கும் போது உள்ள மார்க்க நினைவுகள் மறுமை அச்சம் நமது குடும்பத்தாரோடும், உலக வியாபார நிலைகளில் ஈடுபடும் போதும் இருப்பதில்லையே! என்று கவலை கொள்கிறார்கள். நமது இந்த இரண்டு நிலைப்பாடு நயவஞ்சகத்தின் அடையாளமோ என அச்சம் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் விரைகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், ''சில நேரம் மறுமை நினைவு, சில நேரம் உலக நினைவு என்பது இயல்பானதுதான்'' என்று ஆறுதல் கூறியபின் தான அமைதியடைகிறார்கள் என்றால்,  மார்க்கத்திற்காக தங்களை  முழுமையாக அர்பணித்த நல்லறத் தோழர்களே தங்களின் அவசியமான உலக செயல்பாடுகள்  எங்கே மார்க்கத்திற்கு முரனாகிவிடுமோ என்று கவலை கொள்கிறார்கள் என்றால், அமல்களில் பலவீனத்தையும், உலக ஆசாபாசங்களில் அதிக நேரத்தையும் செலவிடும் நாம் எந்த அளவிற்கு கவலை கொள்ள வேண்டும்? நாம் அவ்வாறு கவலை கொண்டதுண்டா? நமது ஒவ்வொரு அசைவும் மார்க்கத்தோடு பொருந்துகிறதா என சீர்தூக்கிப் பார்த்து வாழ்ந்த அபூபக்ர்[ரலி] மற்றும் ஹன்ழலா[ரலி] வாழ்விலிருந்து படிப்பினை பெறுவோம்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இறைவனால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
 
ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை' என்று அவர்கள் சாதித்தார்கள்.
 
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். அப்போது,
 
'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)' என்று கூறினார்கள். நூல்; புஹாரி எண்; 4900௦௦ 
 
திருக்குர்'ஆன் மூலம் உண்மைப் படுத்தப்பட்டவராக ஆன்னை ஆயிஷா[ரலி] அவர்களை அனைவரும் அறிந்து  வைத்துள்ளோம். அதே போல் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை'யின் பொய் சத்தியத்தால் பொய்ப்படுத்தப்பட்ட ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களை, அல்லாஹ் ஒரு வசனத்தையே  இறக்கி 'உண்மையாளர்' என்று தனது தூதருக்கும், அன்றைய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் உள்ளளவும் வாழும் மக்கள் அனைவருக்கும் உணர்த்துகின்றான் என்றால் இங்கே ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களின் சிறப்பு பளிச்சிடுகிறது. மேலும் தான் சொன்ன உண்மை பொய்யாக்கப் பட்டதை அறிந்து அந்த  நபித்தோழர் அடைந்த  மன  வேதனை அவர்களின் நல்லொழுக்கத்தை பறை சாற்றுகிறது. நல்லவர்கள் மீது சுமத்தப்படும்  களங்கம் நீண்டநாள் நீடிப்பதில்லை. அதே போல் இன்றைக்கு சிலர் தங்களின் வாதத்திறமையால் சஹாபாக்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும் முறியடிக்க அல்லாஹ் போதுமானவன்.   

சனி, 13 ஆகஸ்ட், 2011

அழைப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்" எனஅபூ வாயில் அறிவித்தார். நூல்;  புகாரி  எண் 70
 
மேற்கண்ட பொன்மொழியில் மிகச்சிறந்த நபித்தோழரான 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் உரையை அனுதினமும் கேட்க ஆவல் கொண்டு ஒருவர் வேண்டுகோள் விடுக்க, அப்படியா! இதோ நான் தயார் எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்காமல் பேசுகிறேன் என்று துள்ளிக் குதித்து வராமல், பேசுவது நல்ல விஷயமாக இருந்தாலும் அதை கேட்பவரின் மனநிலையை உணர்ந்து, கேட்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், ''நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி இவ்வாறு தான் இறைத்தூதரின் வழிமுறையும் இருந்தது என்றும் கூறி அறிவுரை என்பது அளவுக்கு மிஞ்சியதாக அமைந்துவிடக் கூடாது என்ற பாடத்தை அழகாக முன் வைக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள்.
 
ஆனால் இன்றைக்கு பேச்சாளர்கள் பலர் 'மைக்' கிடைத்தால் போதும் என கடித்து துப்புவதையும், அவருக்குரிய நேரம் முடிந்துவிட்டது என நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் சுட்டிக்காட்டினாலும் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்கிறார்கள். இவ்வாறான இவர்களின் நிலைக்கு காரணம், நமது பேச்சை  மக்கள்  விரும்புகிறார்கள் என்று இவர்கள் நம்புவதுதான். ஆனால் மக்களே விரும்பினாலும் அளவோடு பேசுவதும், அறிவுரை சொல்வதும்தான் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறை என்பதைக் காட்டிய அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் வாழ்வு அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்தாகும். ஏனெனில்,
'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்பது  அல்லாஹ்வின் தூதர்[ஸல்) அவர்களின் கட்டளையாகும் [நூல்;  புகாரி  எண் 69 ]

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தர்மம்  செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக்  கொண்டு வந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன். அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று  பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.

நூல்; திர்மிதி, அபூதாவூத்.

இந்த பொன்மொழியை நாம் கவனிக்கும் வேளையில், அருமை சஹாபாக்கள் எதற்கு போட்டி போட்டுள்ளார்கள் என்பதை முதலாவதாக நம்மால் அவதானிக்க முடிகிறது. நம்மில் பெரும்பாலோர் நமது சக சகோதரரை  செல்வம் உள்ளிட்ட உலக விஷயங்களில் முந்த முற்படுகிறோம். அவரை விட எங்களுக்குத் தான் வலிமை  அதிகம் என்று காட்ட முற்படுகிறோம். இவ்வாறன உலக விஷயங்கள் எல்லாம் சஹாபாக்களுக்கு இரண்டாம்பட்சமாக, இறைவனின் பொருத்தம் ஒன்றே முதலாவதாக தோன்றியதால் தான் செல்வங்களை  அல்லாஹ்வின் பாதியில் வாரி வழங்குவதில் ஒருவரை ஒருவர் போட்டி  போட்டுக் கொண்டனர். அதிலும் மிக உயர்வான தோழரான அபூபக்ர்[ரலி] அவர்களை, மற்றொரு உயர்வான நபித் தோழர் உமர்[ரலி] அவர்களால் கூட எந்த விஷயத்திலும் நன்மையில் முந்த முடியவில்லை எனும் நிலையில், நாமெல்லாம் நமது அமல்களெல்லாம் இந்த நபித் தோழர்களின் அமல்களோடு ஒப்பிடுகையில் கடலில்  கரைத்த பெருங்காயம் போன்று காட்சியளிக்கிறது. ஆனாலும் நபித் தோழர்கள் வாழ்வில் ஏதேனும் கறையோ, குறையோ தென்படாதா? என கண்ணில் எண்ணெய் ஊற்றி தேடுவதில் மட்டும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நம்மில் பலரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. 

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்ர்-உமர்[ரலி-அன்ஹும்] ஆகியோரைப் போன்று, நாமும்  நன்மையில் போட்டி போடக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!