வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வானவர் கோமான் ஜிப்ரீலும் வந்தாரே இவர் வடிவத்திலே...!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா(ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார் (தெரியுமா)?' என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா(ரலி), 'இவர் (தங்களின் தோழர்) திஹ்யா' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா
அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்கள்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியேற்றீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து' என்று பதிலளித்தார்கள். நூல்; புகாரி
 
மேற்கண்ட பொன்மொழியில் வானவர் கோமான் ஜிப்ரீல்[அலை], திஹ்யா[ரலி] அவர்கள் உருவத்தில் வந்துள்ளார்கள். ஜிப்ரீல்[அலை] அவர்கள் மனித உருவில் வந்ததாக ஹதீஸ்கள் சில இருந்தாலும், உறுதியாக  ஒரு நபித்தோழர்  வடிவில் வந்த சிறப்பை பெற்றவர் திஹ்யா[ரலி] அவர்களாவார்.
 
மேலும் இந்த திஹ்யா[ரலி] அவர்கள் நபியவர்களின் நம்பிக்கைக்கு பத்திரமான நபித் தோழராவார். ஹெர்குலிஸ் மன்னருக்கு நபி[ஸல்] அவர்கள் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தை கொண்டு செல்லும் பாக்கியம் பெற்றவரும் இந்த திஹ்யா அல் கல்பீ[ரலி] அவர்களே!
 
அடுத்து கைபர் யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்ட அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி] அவர்கள், திஹ்யா[ரலி] அவர்களுக்கு போர்ச் செல்வங்களின் பங்காக சேர்ந்தார்கள். பிறகு நபி[ஸல்] அவர்கள் அன்னை ஸபியா பின்த் ஹுயை[ரலி]யை  மணக்க விரும்பி திஹ்யா[ரலி] அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க, மறுக்காமல் வழங்கிய மனமுடையவரும் இந்த திஹ்யா[ரலி] அவர்களாவர்.
 
அல்லாஹ் திஹ்யா[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக