சனி, 10 அக்டோபர், 2009

உமர்[ரலி] மற்றும் அன்னை ஆயிஷா[ரலி] மீதும் புதிய அவதூறு!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் வஹிக்கு முரணான நபித்தோழர்களின் நடவடிக்கைகள் என்ற பகுதியில், நபி[ஸல்] அவர்கள் இறந்த போது உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று சொன்னதை இப்படி வர்ணிக்கிறார்கள்;
நபி[ஸல்] அவர்கள் மரணித்தபோது உமர்[ரலி]உள்ளிட்ட பல நபித்தோழர்கள் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்கமாட்டார்கள் என்றும், உயிர்த்தெழுவார்கள் என்றும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தை கொன்டிருந்தார்கள்அபூபக்கர்[ரலி] தக்க ஆதாரங்களை எடுத்துக்காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையை புரியவைக்கும் வரை நபி[ஸல்] அவர்களின் மரணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
என்று எழுதிவிட்டு இரு ஹதீஸ் எண்களை போட்டுள்ளார்கள். அந்த இரு ஹதீஸ்கள் கீழே;
  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; நபி[ஸல்] அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். [புஹாரி எண் 1242 ]
  • அபூ பக்ர்(ரலி) மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தார்கள். அவர்களின் உரையின் காரணத்தால், 'முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்' என்றும் (திருக்குர்ஆன் 03: 144-ம்) வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள்.[நூல்;புஹாரி எண் 3670 ]

அவர்கள் எடுத்துவைத்த இந்த இரு ஹதீஸ்களிலும் நபி[ஸல்] அவர்கள் மரணமடையவில்லை என்ற மனநிலையில் சகாபாக்கள் இருந்ததையும் அபூபக்கர் [ரலி] அவர்கள் தெளிவுரைக்கு பின் நபி[ஸல்] அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள் என்பதை விளங்கமுடிகிறது. இந்த இரு செய்திகளிலும் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கமாட்டார்கள் என்று எந்த சகாபியாவது சொன்னதாக குறிப்பு உள்ளதா..? என்றால் இல்லை. அதே நேரத்தில் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர்[ரலி] அவர்கள் சொன்ன செய்தி வேறு எண்ணில் பதிவாகியுள்ளது;

  • நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார். அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.[புஹாரிஎண் 3667 ]

இந்த செய்தியை கவனமாக படியுங்கள். உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் இறக்கவில்லை [அதாவது] மரணிக்கவில்லை என்று சொன்னார்களே யன்றி, மரணிக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லை. மரணிக்கவில்லை என்பதற்கும் மரணிக்க மாட்டார்கள் என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

மரணிக்கவில்லை; இப்போது மரணிக்கவில்லை ஆனால் மரணிப்பார் என்ற அர்த்தத்தை தரும். உதாரணமாக ஈஸா[அலை] அவர்கள் மரணிக்கவில்லை என்று நாம் சொல்கிறோம். அதற்காக அவர்கள் மரணிக்கவே மாட்டார்கள் என்று அர்த்தமா? என்றால் இல்லை . இப்போது அவர்கள் மரணிக்கவில்லை. ஆனால் மரணிப்பார்கள் என்று விளங்கிக்கொள்கிறோம். இந்த அர்த்தத்தில்தான் உமர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று சொன்னார்கள் என்று விளங்கவேண்டும்.

மரணிக்கமாட்டார்கள்; இது எப்போதுமே மரணம் இல்லை என்ற அர்த்தத்தை தரும். எனவே உமர்[ரலி] அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தாதபோது, மரணிக்க மாட்டார்கள் என்று உமர்[ரலி] அவர்கள் சொன்னார்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தை விதைத்தார்கள் என்று கூறுவது அப்பட்டமான அவதூரல்லவா?

மேலும், அந்த 72 . கூட்டம் யார்? என்ற உரையில் மேற்கண்ட சம்பவத்தை பற்றி சொல்லும்போது இப்படி அந்த அறிஞர் வர்ணிக்கிறார்;

கெட்ட கொள்கைகள் இஸ்லாமிய போர்வையை போர்த்திக்கொண்டு உலகுக்கு வந்தது அத்தகைய கொள்கைகளை ஆய்வு செய்யப்போகிறோம் என்ற பீடிகையோடு, நபி[ஸல்] அவர்கள் மரணித்த உடன் ஏற்ப்பட்ட முதல் கொள்கை குழப்பம் நபி[ஸல்] அவர்களின் மரணித்த அடுத்த வினாடியே ஏற்பட்டது. உமர் சொல்றார்; அல்லாஹ் மேல ஆணையா சொல்றேன் ரசூலுல்லாஹ் மவ்த்தாபோகல. தொலைச்சிருவேன்! இப்ப நான்தான் லீடரு; என்று உமர் லீட் பண்றாரு.

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் சொன்ன வாசகம் மேற்கண்ட ஹதீஸில் நாம் உங்களுக்கு விளக்கியுள்ளோம். இந்த அறிஞரின் கூற்று பிரகாரம் இஸ்லாமிய வரலாற்றில் முதல் முதலாக வழிகெட்ட கொள்கையை சொன்னவர் உமர்[ரலி] என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறார். சரி! ஒருவரை கொள்கை குழப்பம் ஏற்படுத்தியவர் என்று எப்போது சொல்லமுடியும் என்றால், ஒருவர் அறிந்தோ-அறியாமலோ ஒரு தவறான கருத்தை சொல்கிறார். அவரது கருத்து தவறு என்று குர்ஆண்-ஹதீஸ் ஆதாரங்கள் காட்டப்பட்டபின்பும், இல்லை நான் சொன்னதுதான் சரி என்று தனது கருத்திலேயே நிலைத்திருந்தால்தான் அவரை கொள்கை குழப்பம் ஏற்ப்படுத்தியவர் என்று சொல்லமுடியும். ஒருவாதத்திற்கு இந்த அறிஞர் சொன்ன வார்த்தையை தான் உமர்[ரலி] சொன்னார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அபூபக்கர்[ரலி] அவர்கள் குர்ஆண் ஆதாரத்தை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்டு தரையில் சரிந்தார்களே! பிறகு எப்படி கொள்கை குழப்பம் ஏற்ப்படுத்தியவராவார்..?

சரி! நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர்[ரலி] அவர்கள் கூறியதற்கு காரணம் இரண்டு. ஒன்று; உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் அதை அப்படியே ஏற்பவர்கள். நம்மைப்போல் நபி[ஸல்] சொன்ன விஷயம் 'அறிவுக்கு பொருந்துகிறதா' குர்ஆணோடு மோதுகிறதா' என்றெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருப்பவர் அல்ல. மேலும், நபி[ஸல்] அவர்களின் நிழலாக இருந்தவர். நபி[ஸல்] அவர்கள் தன் திரு வாயால், நானும் அபூபக்கரும்-உமரும் இங்கே போனோம், நானும் அபூபக்கரும்-உமரும் இதை செய்தோம், நானும் அபூபக்கரும்-உமரும் இப்படி சொன்னோம் என்று சொல்லலும் அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் இஸ்லாமிய பயணத்தில் தளபதியாக திகழ்ந்தவர் உமர்[ரலி] அவர்கள். தன் உயிரும் மேலான தோழர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் சொன்ன வாசகம்தான் நபி[ஸல்] அவர்கள் மரணிக்கவில்லை என்பது.[இதை அந்த அறிஞரும் வேறு வார்த்தையில் கூறியுள்ளார்].

காரணம் இரண்டு;ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் பார்வை (அவர்களின் மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள், 'மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)" என்று (மூன்று முறை) கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் காசிம்(ரஹ்) (நபி-ஸல் அவர்களின் இறப்பு சம்பவம் தொடர்பான) இந்த ஹதீஸை முழுமையாக எடுத்துரைத்தார்கள். ஆயிஷா(ரலி) கூறினார். (அபூ பக்ர், உமர் ஆகிய) அவ்விருவரின் உரைகளில் எந்தவோர் உரையைக் கொண்டும் அல்லாஹ் நன்மை புரியாமல் இல்லை. உமர் அவர்கள் (தவறாக நடந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று) மக்களை எச்சரித்தார்கள். ஏனெனில், மக்களிடையே நயவஞ்சககுணமுடையவர்களும் (அப்போது) இருந்தனர். (உமர் அவர்களின்) அந்த (அச்ச மூட்டும்) உரையின் வாயிலாக அல்லாஹ் அ(ந்த நயவஞ்சக குணமுடைய)வர்களை (சத்தியத்தின் பக்கம்) திருப்பினான். [புஹாரி எண் 3669 ]

உஹத் களத்தில் நபி[ஸல்] உயிரோடு இருக்கும்போதே மரணித்து விட்டதாக நயவஞ்சகர்கள் ஃபித்னா செய்து முஸ்லிம்கள் மத்தியில் பலவீனத்தை உண்டாக்க முயற்சித்தது போன்று, நபி[ஸல்] மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நேரத்திலும் செய்யலாம் என்பதால் உமர்[ரலி] அவர்கள் எச்சரிக்கை செய்ததாக அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. ஆக, நபி[ஸல்] அவர்களின் மரணவேளையில் உமர்[ரலி] அவர்கள் விடுத்த எச்சரிக்கை மூலம் அல்லாஹ் நன்மையை நாடியதாக அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த 'அதிமேதாவியோ' இல்லை உமர் கொள்கை குழப்பம் உண்டாக்கினார் என்கிறார். அல்லாஹ் அறிந்தவன்.

அடுத்து, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது 72 .கூட்டம் யார் என்ற உரையில் புதிய அவதூறை சுமத்துகிறார். அதாவது பெண்களில் மிக அறிவுடைய ஆயிஷாநாயகி[அவர் பாஷையில்] நபி[ஸல்] அவர்கள் மரணித்தவுடன்,

'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள் என்றும் அதற்கான ஹதீஸ் புஹாரியில் உள்ளது என்றும் பேசினார். நாமும் புஹாரியில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கக்கூடிய, அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சம்மந்தப்பட்ட சுமார் 957 .ஹதீஸ்களை பார்த்தோம். எந்த ஒன்றிலும் அன்னையவர்கள் இந்த அறிஞர் சொன்னது போன்று சொல்லவில்லை. மாறாக உமர் ரலி அவர்கள் சொன்னதாக அன்னையவர்கள் அறிவிக்கும் செய்திதான் 3667 வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது.

ஆக அன்பானவர்களே! விருப்பையும்-வெறுப்பையும் தனியாக வைத்துவிட்டு, நீங்கள் இந்த ஆக்கத்தை படித்தால் உமர்[ரலி] அவர்கள் மீதும், அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீதும் இந்த அதிமேதாவி அபாண்டமான அவதூறை சுமத்தியுள்ளார் என்பது ஊர்ஜிதமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக