வியாழன், 1 அக்டோபர், 2009

மாற்றுக்கருத்து சொல்லும்போதும், மற்றவரின் 'மாண்பு' காக்கும் தன்மை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
மனிதர்களாகிய நமக்கு சிந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த சிந்தனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. அது மார்க்க விஷயமாக இருந்தாலும் அல்லது உலக விஷயமாகவே இருந்தாலும் சரியே! அப்படியாயின் செய்யவேண்டியது என்ன? ஒரு விஷயத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுமாயின் அதில் எவர் சொல்லும் கருத்துக்கள் குர்ஆண்-ஹதீஸுக்கு உட்பட்டதாக இருக்கிறதோ அதை சொல்பவர் 'பட்டம் வாங்கி பறக்கவிடாத' சமான்யராகவே இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன? ஒருவர் அல்லது ஒரு சாரார் மட்டுமே மார்க்க மேதைகள் என்றும், அவர்கள் மட்டுமே ஆய்வாளர்கள் என்றும், அவர்கள் சொல்வது மட்டுமே சரியானதாக இருக்கும் என்றும் எழுதப்படாத ஒரு சட்டம் தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே வேரூன்றி உள்ளது. அந்த ஒருவர் அல்லது ஒரு சாரார் சொல்லும் கருத்துக்களுக்கு மாற்றமாக யாரேனும் கருத்துசொன்னால் அவ்வாறு சொல்பவர்களை கருத்து ரீதியாக, ஆதாரங்கள் ரீதியாக எதிர்கொள்ளாமல் தரம்தாழ்ந்து, அவன்-இவன் என்றும்-பொய்யன் ஜமாஅத் என்றும்-அடுத்தவர் தின்று வாந்தி எடுத்ததை விழுங்கி மறு வாந்தி எடுத்தவன் என்றும்-கோமாளி-பைத்தியம் என்றும்-சாக்கடைப் பன்றிகள் என்றும்-அறிவிலி என்றும்-தடம் புரண்டவர்கள் என்றும் இன்னும் எண்ணற்ற வார்த்தைகளால் விமர்சிப்பதை பார்க்கிறோம். அதோடு தங்களின் கருத்துக்கு மாற்று கருத்தை சொன்ன அறிஞர்களின் கருத்தை வெளியிட்டமைக்காக இஸ்லாம்கல்வி.காம் என்ற இஸ்லாமிய தளத்தை பலவேஷம்.காம் என்றும், குப்பை.காம் என்றும் வெளிப்படையாகவே விமர்சிப்பதையும் பார்க்கிறோம். மேற்குறிப்பிட்ட அந்த தளத்தில் [இவர்கள் பார்வையில்]சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் இருந்தாலும், எண்ணற்ற இஸ்லாமிய செய்திகள் அல் குர்ஆண்-ஹதீஸ் ஆதாரத்தோடு தொகுத்து வழங்கப்பட்டுள்ளதே! அந்த தளம் குப்பை.காம் என்றால் இந்த இஸ்லாமிய செய்திகளும் குப்பைதானா? இஸ்லாம் இவ்வாறுதான் மாற்றுக்கருத்து கொண்டவர்களை விமர்சிக்க சொல்கிறதா? இதோ நபிகளார்[ஸல்] அவர்களிடத்தில் ஒரு அழகிய முன்மாதிரி;

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன ('அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே' எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
ஆதாரம்;புஹாரி எண் 6147

பொய்யையே மூலதனமாக கொண்ட கவிஞனின் கூற்றில் உள்ள ஒரே ஒரு உண்மையை கூட நபி[ஸல்] அங்கீகரித்துள்ளார்கள் என்றால், தமது கருத்துக்கு மாற்றமான கருத்துகள் இடம் பெற்றமைக்காக ஒரு தளத்தையே குப்பை என்று விமர்சிப்பது சரியா? மேலும் நபி[ஸல்] அவர்களின் அடியொற்றி வாழ்ந்த அருமை சஹாபாக்கள் மாற்றுக்கருத்துடையவர்களுக்கு எப்படி அழகான முறையில் பதிலளித்துள்ளார்கள் பாருங்கள்;

உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்" என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே" என்றும் கூறினார்கள்.
ஹதீஸ் சுருக்கம், ஆதாரம்;புஹாரி எண் 1286

இந்த பொன்மொழியில் இரண்டு விஷயங்களை கவனிக்கவேண்டும். ஒன்று 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உமர்[ரலி] கூறுவதை அறிந்த அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் நம்மைப்போல், உமர் சொல்வது குர்ஆணுக்கு முரணானது இப்படி நபி[ஸல்] அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். எனவே இந்த ஹதீஸ் 'ரிஜெக்டேடு' என்று சொல்லவில்லை. மாறாக நபி[ஸல்] அவர்கள் அப்படி சொல்லவில்லை. இப்படித்தான் சொன்னார்கள் என்று விளக்கமளிக்கிறார்கள்.

இரண்டு; உமர்[ரலி] அவர்கள் விளங்கியதற்கு மாற்றமாக விளக்கமளித்த அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள், உமர்[ரலி] அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! என்று அழகான வார்த்தையை கொண்டு விளக்கமளிக்கிரார்களே! இதுதான் நபி[ஸல்] அவர்களின் பாடம் படித்த அந்த சத்திய சகாபாக்களுக்கும்- 'கேள்வி ஞானம்' மூலம் மார்க்கத்தை படித்த நமக்கும் உள்ள வேறுபாடு. இதிலே சஹாபாக்களை விட நாம் 'மேன்மக்கள்' என்ற சிந்தனை வேறு நமக்குள்ளே!
ஆகவே அன்பானவர்களே! கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்- அதில் கண்ணியத்தை பேணுவோம். எல்லோரும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிடக்கூடியவர்களும் அல்ல. எல்லோரும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் தவறாக சொல்லக்கூடியவர்களும் அல்ல. எனவே கருத்தை ஆளை வைத்து முடிவு செய்வதை விட ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வோம். அதுதான் நபிவழியும்-உயர்வான நபித்தோழர்களின் நடைமுறையுமாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக