சனி, 18 ஆகஸ்ட், 2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!
  
உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த'பெருநாள் நல் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!!

என்றும் இறைப்பணியில்,

உங்கள் இஸ்லாமிய சகோதரன்..
முகவைஅப்பாஸ்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

“என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” உண்மையாளர் அபூபக்கர்[ ரலி]யின் உருக்கம்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஆயித் பின் அம்ர் [ரலி] அவர்கள் அறிவித்தார்கள் :
ஸல்மான் [ரலி], சுஹைப்[ரலி], பிலால் [ரலி] ஆகியோர் கொண்ட குழுவிடம்(அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத) அபூசுஃப்யான் வந்தார்.  அப்போது அக்குழுவினர்,  “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் எதிரியான இவர் கழுத்தில் இன்னும் வாட்கள் பதம்பார்க்கவில்லையே! என்று கூறினார்கள்.  

அப்போது அபூபக்ர் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள், 
“குறைஷியரில் மூத்தவரும் தலைவருமான இவரைப் பார்த்தா இப்படிக் கூறுகிறீர்கள்” என்று சொன்னார்கள்.  பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைக் கூறியபோது அபூபக்ரே! நீங்கள் அக்குழுவினரைக் கோபமுண்டாக்கியிருப்பீர்கள் போலும், அவர்களை நீங்கள் கோபமுண்டாக்கியிருந்தால் உங்கள் இரட்சகனை நீங்கள் கோபமுண்டாக்கிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். 

 உடனே அபூபக்ர்[ரலி] அவர்கள், அக்குழுவினரிடம் வந்து,  “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” என்று கேட்டார்கள்.  அதற்கு அவர்கள், “இல்லை! எங்கள் 
சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்.[நூல்; முஸ்லிம்]

இந்தப் பொன்மொழியில், அபூசுப்யான்  குறைஷியர் மத்தியில் பெரிய அந்தஸ்துக்குரியவராக இருந்த போதிலும்  அவர் முஸ்லிம்களுக்கு எதிரான காரியங்களை செய்யக்கூடியவராகவும்  இருந்ததினால் அவர் மீது பிலால்[ரலி] உள்ளிட்ட சஹாபாக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக உதிர்த்த வார்த்தைகளை கண்ட அபூபக்கர் ரலி அவர்கள், என்னதான் அவர் இஸ்லாமிய விரோதியாக இருந்தாலும் அபூசுபயான் குறைஷியர்களில் மூத்தவர் என்ற அடிப்படையில் அந்த வார்த்தைகளை ஆட்சேபிக்கிறார்கள்.

ஆனாலும், அபூபக்கர் ரலி அவர்களின் இந்த செயல் அந்த மூன்று தோழர்களையும் கோபத்திற்குள்ளாக்கி இருக்குமானால் அது அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத்தரும் என்று நபி [ஸல்] அவர்கள் சொன்ன மாத்திரமே, அல்லாஹ்வின் கோபம் நம்மீது ஏற்படாமல் இருக்க ஒரே வழி சம்மந்தப்பட்ட தோழர்களிடம் வருத்தம் தெரிவிப்பதே என உணர்ந்த அபூபக்கர் ரலி அவர்கள், எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக பிலால் [ரலி] உள்ளிட்ட தோழர்களிடம் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” என்று கேட்கிறார்கள் என்றால் இங்கேதான்  அபூபக்ர் ரலி அவர்களின் அழகிய பண்பையும், அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றே லட்சியம் என்ற அவர்களின் வாழ்க்கையும் நம்மால் உணரமுடிகிறது. 

இன்றைக்கு நம்மவர்களின் நிலை என்ன? சக சகோதர்களை எவ்வித முகாந்திரமுமின்றி கோபம் உண்டாக்கக் கூடிய, அவர்களின் மானத்தோடு விளையாடக்கூடிய செயலை சர்வசாதரணமாக செய்வதோடு அதை அழைப்புப் பணியின் ஒரு அங்கம் என்றே எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். சக சகோதரன் விசயத்தில் தனது செயல் தவறு என்று தெரிந்த பின்பும் சம்மந்தப்பட்டவரிடம் வருத்தம் தெரிவித்து தன்னை அந்த பாவத்திலிருந்து மீட்பதற்குப் பதிலாக, தனது தவறை மறைக்க ஆயிரம் வியாக்கியானம் சொல்லியேனும்  நியாயப்படுத்தும் காட்சியைப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணம் சாதாரணமான இவனிடம் நான் மன்னிப்புக் கேட்பதா என்ற ஆணவம் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த உம்மத்தின் சிறந்த ஈமானுடயவர் என்றும் சுவனத்தைக் கொண்டும் நபியவர்களால் நன்மாராயம் சொல்லப்பட்ட அபூபக்கர் ரலி அவர்கள், தனது தவறை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை என்பதை உணர்ந்து, இந்த பண்பை வளர்த்துக் கொள்ள நாமும் முன்வரவேண்டும். அதுதான் இறைவனின் திருப்தியையும், சக சகோதரர்களிடம்  இணக்கத்தையும் உண்டாக்கும்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

முஆது பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் பணிவு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

முஆது பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அறிவித்தார்கள்;

நான் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் (வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்களுக்கும் எனக்கும் இடையில் வாகனத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை. (அப்போது) 'முஆது பின் ஜபல் அவர்களே! " என்றழைத்தனர். 
 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜர் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்ப்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்." எனக் கூறினேன். 

பிறகு சிறிது நேரம் சென்றனர்.  பிறகு 'முஆது பின் ஜபல் அவர்களே! " என்றனர். 
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன்.  
உங்களுக்கு கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்" என்றேன். 

பிறகு சிறிது நேரம் (வாகனத்தில்) சென்றனர். 'முஆது பின் ஜபல் அவர்களே!" என்றனர். 
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன்.  
உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " என்றேன். 

'அடியார்கள் அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடமை என்ன என்பது உனக்கு தெரியுமா? " என்றார்கள்.  'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்றேன். 
'நிச்சயமாக அடியார்கள் அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய கடமை, 
அவனை வணங்குவதும் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருப்பதாகும் "  என்றனர்.  

பிறகு சிறிது நேரம் வாகனத்தில் சென்றனர். 'முஆது பின் ஜபல் அவர்களே! " என்றழைத்தனர்.
'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இதோ உங்கள் அழைப்பிற்கு ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு 
கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " என்றேன். 

'அடியார்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா? " எனக் கேட்டார்கள்.
'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்றேன்.
'அவர்களை அவன் தண்டிக்காமல் இருப்பதேயாகும். " என்றனர். 
[நூல்; முஸ்லிம்]

இந்த பொன்மொழியில் நபி [ஸல்] அவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் அற்புதமான பண்பை நாம் பார்க்கிறோம். அல்லாஹ்வின் தூதரோடு ஒரே வாகனத்தில் பயணித்த இந்த நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் அந்த அழைப்பை எதிர்பார்த்தவர்களாக, அந்த அழைப்பின் மூலம் உள்ளம் உவகை கொண்டவர்களாக ஒவ்வொரு அழைப்பிற்கும், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன்.  உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் " என்று கூறுகிறார்கள். 

அது மட்டுமன்றி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் இரண்டு விஷயங்களைப் பற்றி கேட்டவுடன் முந்திக்கொண்டு தனக்கு தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் பணிவாக, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் " என்று கூறுகிறார்கள். அருள்மறை இறங்கிய அல்லாஹ்வின் தூதரிடத்தில் பாடம் பயின்ற நபித்தோழர்கள் யாரும் மார்க்க ஞானத்தில் தாங்கள் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் படித்துக் கூட அல்ல; கேள்விஞானம் மூலமாக சில விசயங்களை அறிந்த  நம்மில் சிலர் மார்க்கத்தையே கரைத்துக் குடித்தது போன்று நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். 

ஆம்! நபித்தோழர்கள் மார்க்கத்தை தேடுவதில் தங்களை என்றுமே மாணவர்களாகவே கருதியுள்ளனர் என்பதை முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களின் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய பணிவு நமது உள்ளத்திலும் மலர அல்லாஹ் நல்லருள் புரிவானாக!


புதன், 20 ஜூன், 2012

மணமகனா...? மார்க்கமா? உம்முஸுலைம்[ரலி]யின் தீர்க்கமான முடிவு.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத அபூதல்ஹா[ரலி] அவர்கள் மணமுடிக்கமுடிக்க நாடி பெண் கேட்டபோது....


‘‘அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால் நீரோ ஏக இறைவனுக்கு இணைவைக்கும் இணைவைப்பாளராக இருக்குறீர். நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று நம்பிக்கை கொண்டால் அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)

அவ்வாறே இஸ்லாத்தை ஏற்று அபூதல்ஹா[ரலி] அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.

இந்த வரலாற்றுச் செய்தியில், உம்முஸுலைம்[ரலி] அவர்கள் மணமகனை தேர்ந்தடுப்பதில் எதை அளவுகோலாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நற்குனத்தையுடைய செல்வத்திலும் சிறந்த நிலையில் இருந்த அபூதல்ஹா[ரலி] அவர்கள், உம்முஸுலைம்[ரலி] அவர்களை மணமுடிக்க விருப்பம் தெரிவித்த மாத்திரத்திலேயே உம்முஸுலைம் [ரலி] அவர்கள், நல்ல வாய்ப்பு! இவரை மணமுடித்தால் நாம் சொகுசாக வாழலாம் எனக் கருதி உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக, அபூதல்ஹா[ரலி] சிறந்தவராக இருக்கலாம்; ஆனால் அவரது வணக்கமுறை சரியல்லவே; அவரோ இனைவைப்பாளராக இருக்கிறாரே! ஒரு இணைவைப்பாளர் என்னதான் மனதை கவர்ந்தாலும் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று வல்ல ரஹ்மான் வான்மறையின் கூறியுள்ளானே! பிறகு எப்படி நாம் அபூதல்ஹா[ரலி] அவர்களை திருமணம் செய்ய முடியும் என என்னியவர்களாக, அபூதல்ஹாவிடம் தெளிவாக சொல்கிறார்கள் நீங்கள் இஸ்லாத்தை தழுவினாலே தவிர உங்களை நான் மணக்கமுடியாது என்று. அது மட்டுமல்ல; எனக்கு மஹராக உமது செல்வங்கள் எதுவும் தேவையில்லை. நீர் சொல்லகூடிய கலிமா ஷஹாதா போதும் என்று. அத்தகைய ஈமானிய உறுதியுடைய உம்முஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாட்டை இன்றைய நமது இஸ்லாமியப் பெண்களோடு ஒப்பிட்டு பார்த்தால்; அல்ல... அல்ல...ஒப்பிடவே முடியாது. காரணம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு இருப்பதால்.

இன்றைக்கு நாளிதழை திறந்தால் நாள்தோறும் எங்கேனும் ஒரு மூலையில் எங்கேனும் ஒரு முஸ்லிம் சகோதரி ஒரு முஸ்லிமல்லாதவனோடு ஓட்டம்; காதல்...கள்ளக்காதல்..திருமணம்.. இவ்வாறான செய்திகளை பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மதம் மாறியவர்கள் பட்டியலை அரசிடம் இருந்து வாங்கிப் பார்த்தால் அங்கே ஒரு பரக்கத் நிஷா பார்வதியாக, நிலோபர் நிஷா நித்யாவாக, ரஹ்மத் நிஷா ரஞ்சிதாவாக இவ்வாறு மாறும் அவலநிலை. முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்து கொண்டு அவனுக்கு வாரிசைப் ஏற்று முஸ்லிமல்லாதவர்களாகவே வாழ்ந்து நரகத்திற்கு முன்பதிவு செய்யும்  வேதனைக் காட்சிகள்; அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக அபரிதமான மறுமை வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். காதல் என்ற பெயரில் ஏற்படும் மயக்கத்தில் சில காமுகர்களின் வலையில் வீழ்ந்து கரைகடந்தவர்கள் வாழ்வில் கறைபட்டு நிற்கிறார்கள். இவ்வாறாக எளிதில் உணர்சிவசப்பட்டு எளிய மார்க்கமாம் இஸ்லாத்தை துறக்கும் இதுபோன்ற யுவதிகள் உம்முஸுலைம்[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து பாடம் படிக்கட்டும். அதோடு பின் வரும் இறை வசனங்களையும் மனதில் கொள்ளட்டும்.


(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். 2;221


ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.60;10


குறிப்பு; உம்முஸுலைம்[ரலி] அவர்களின் வாழ்க்கை முஸ்லிமல்லாதவர்களை மணக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல; காதலிக்காக இஸ்லாத்தை துறக்கும் ஆண்களுக்கும் படிப்பினை உள்ளது.

வியாழன், 14 ஜூன், 2012

சஹாபாக்களை விட நாங்கள் சிறந்தவர்கள்; எப்படி...?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

திருக்குர்'ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் என்ற பெயரில் தனது கருத்தை திணிக்க முற்படுபவர்கள் இறைவனால்பொருந்திக் கொள்ளப்பட்ட சஹாபாக்களை விட நாங்கள் சிறந்தவர்கள் என்பதற்காக சில வியாக்கியானங்களை பரவலாக முன்வைக்கிறார்கள். அந்த வியாக்கியானம் சரியா? என்பதையறிய இந்த வீடியோவை காணுங்கள்;

ஞாயிறு, 27 மே, 2012

''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்''

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


தவ்ராத்திலும், இன்ஜீலிலும் சத்திய சஹாபாக்கள்;


مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது  இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.[48:29]

தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூறப்படும் அளவுக்கு சிறப்பிற்குரிய அந்த நல்லறத் தோழர்களின் பண்புகளில் ஒன்றாக அல்லாஹ் கூறுவது அவர்கள், ''காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்'' என்று கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு சிலர், அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் நபித்தோழர்களின் இந்த பண்புக்கு மாற்றமாக, தனது ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம்களை சத்திய இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து, அவர்களுடன் வியாபாரத் தொடர்பு கூடாது. அவர்கள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில் முஸ்லிமல்லாதவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என்று பத்வா வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்களோடு வியாபாரம் சேர்ந்து வியாபாரம் செய்யக்கூடாது என்பதற்காக இதை நாம் சொல்லவில்லை. மாறாக, முஸ்லிமல்லாதவர்கள் மீது காட்டும் கருணையைக் கூட இயக்கத்தை விட்டு பிரிந்த சக முஸ்லிம்கள் மீது காட்ட மறுக்கிறார்கள் என்பதற்காகவே.


அல்லாஹ் சிலாகித்துச் சொல்லும் ஒரு பண்பையுடைய, காபிர்களிடம் மார்க்க விசயத்தில் கடுமையானவர்களாக, மூமீன்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாக இருக்கக்கூடிய அந்த உயந்த தோழர்கள் எங்கே? சக முஸ்லிம்களோடு கருத்து வேறுபாடு வந்துவிட்டால் அவர்களை பரம வைரிகளாக கருதும் நாம் எங்கே? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.




சனி, 26 மே, 2012

தாயா? மார்க்காமா? தளராத உறுதியுடன் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

நான்[சஅத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது   அல்லாஹ்,

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னு
டைய மீளுதல் இருக்கிறது."
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று சஅத் இப்னுஅபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. வது ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில், இஸ்லாத்தை விட்டுவிட வேண்டும் என்று தன்னுடைய தாய் மூன்று நாட்கள்உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், சஅத்[ரலி]அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய முஸ்லிம்களிடம் காணமல் போனது ஏ ன்? திருமண நேரத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால் நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன் நபிவழியில் மஹர்கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா'டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் செத்துருவேன்என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்ததுல'தான் அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.

இது உண்மையா? தாய் கட்டளையிட்ட எத்தனையோ உலக விசயங்களை கண்டுகொள்ளாத இவர்கள், மார்க்கத்திற்கு முரணாண இந்த விசயத்திற்கு மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிப் போவது ஏன் ? காரணம் ஒன்றுதான். 
சஹாபாக்கள் அல்லாஹ்வின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்]  அவர்களின் கூற்றுக்கும் முன்னுரிமை தந்தார்கள். இவ்விரண்டுக்கும் முரணான மனிதர்களின் கூற்றை, அது பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் புறந்தள்ளினார்கள். எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழப்போம். ஆனால் ஈமான் இழக்க மாட்டோம் என்பதுதான் அவர்களின் நிலை. காரணம் இந்த இஸ்லாத்தைப் பெறுவதற்கு அந்த நல்லறத் தோழர்கள் செய்த தியாகங்கள் அவர்களுக்கு இந்த உறுதியைத் தந்தது. ஆனால் நாமோ வாரிசு அடிப்படையில் பெற்றதனால் இந்த ஈமானின் சுவை நமக்குத் தெரிவதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெரும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!