புதன், 20 ஜூன், 2012

மணமகனா...? மார்க்கமா? உம்முஸுலைம்[ரலி]யின் தீர்க்கமான முடிவு.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத அபூதல்ஹா[ரலி] அவர்கள் மணமுடிக்கமுடிக்க நாடி பெண் கேட்டபோது....


‘‘அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால் நீரோ ஏக இறைவனுக்கு இணைவைக்கும் இணைவைப்பாளராக இருக்குறீர். நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று நம்பிக்கை கொண்டால் அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)

அவ்வாறே இஸ்லாத்தை ஏற்று அபூதல்ஹா[ரலி] அவர்கள் இஸ்லாத்தை ஏற்று உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.

இந்த வரலாற்றுச் செய்தியில், உம்முஸுலைம்[ரலி] அவர்கள் மணமகனை தேர்ந்தடுப்பதில் எதை அளவுகோலாக கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த நற்குனத்தையுடைய செல்வத்திலும் சிறந்த நிலையில் இருந்த அபூதல்ஹா[ரலி] அவர்கள், உம்முஸுலைம்[ரலி] அவர்களை மணமுடிக்க விருப்பம் தெரிவித்த மாத்திரத்திலேயே உம்முஸுலைம் [ரலி] அவர்கள், நல்ல வாய்ப்பு! இவரை மணமுடித்தால் நாம் சொகுசாக வாழலாம் எனக் கருதி உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. மாறாக, அபூதல்ஹா[ரலி] சிறந்தவராக இருக்கலாம்; ஆனால் அவரது வணக்கமுறை சரியல்லவே; அவரோ இனைவைப்பாளராக இருக்கிறாரே! ஒரு இணைவைப்பாளர் என்னதான் மனதை கவர்ந்தாலும் அவரை திருமணம் செய்யக்கூடாது என்று வல்ல ரஹ்மான் வான்மறையின் கூறியுள்ளானே! பிறகு எப்படி நாம் அபூதல்ஹா[ரலி] அவர்களை திருமணம் செய்ய முடியும் என என்னியவர்களாக, அபூதல்ஹாவிடம் தெளிவாக சொல்கிறார்கள் நீங்கள் இஸ்லாத்தை தழுவினாலே தவிர உங்களை நான் மணக்கமுடியாது என்று. அது மட்டுமல்ல; எனக்கு மஹராக உமது செல்வங்கள் எதுவும் தேவையில்லை. நீர் சொல்லகூடிய கலிமா ஷஹாதா போதும் என்று. அத்தகைய ஈமானிய உறுதியுடைய உம்முஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாட்டை இன்றைய நமது இஸ்லாமியப் பெண்களோடு ஒப்பிட்டு பார்த்தால்; அல்ல... அல்ல...ஒப்பிடவே முடியாது. காரணம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு இருப்பதால்.

இன்றைக்கு நாளிதழை திறந்தால் நாள்தோறும் எங்கேனும் ஒரு மூலையில் எங்கேனும் ஒரு முஸ்லிம் சகோதரி ஒரு முஸ்லிமல்லாதவனோடு ஓட்டம்; காதல்...கள்ளக்காதல்..திருமணம்.. இவ்வாறான செய்திகளை பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மதம் மாறியவர்கள் பட்டியலை அரசிடம் இருந்து வாங்கிப் பார்த்தால் அங்கே ஒரு பரக்கத் நிஷா பார்வதியாக, நிலோபர் நிஷா நித்யாவாக, ரஹ்மத் நிஷா ரஞ்சிதாவாக இவ்வாறு மாறும் அவலநிலை. முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்து கொண்டு அவனுக்கு வாரிசைப் ஏற்று முஸ்லிமல்லாதவர்களாகவே வாழ்ந்து நரகத்திற்கு முன்பதிவு செய்யும்  வேதனைக் காட்சிகள்; அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக அபரிதமான மறுமை வாழ்வை தொலைத்து நிற்கிறார்கள். காதல் என்ற பெயரில் ஏற்படும் மயக்கத்தில் சில காமுகர்களின் வலையில் வீழ்ந்து கரைகடந்தவர்கள் வாழ்வில் கறைபட்டு நிற்கிறார்கள். இவ்வாறாக எளிதில் உணர்சிவசப்பட்டு எளிய மார்க்கமாம் இஸ்லாத்தை துறக்கும் இதுபோன்ற யுவதிகள் உம்முஸுலைம்[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து பாடம் படிக்கட்டும். அதோடு பின் வரும் இறை வசனங்களையும் மனதில் கொள்ளட்டும்.


(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். 2;221


ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.60;10


குறிப்பு; உம்முஸுலைம்[ரலி] அவர்களின் வாழ்க்கை முஸ்லிமல்லாதவர்களை மணக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல; காதலிக்காக இஸ்லாத்தை துறக்கும் ஆண்களுக்கும் படிப்பினை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக