வெள்ளி, 3 செப்டம்பர், 2010

விபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற இறையடியார்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஜாபிர்(ரலி) அறிவித்தார்;


பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல) அவர்கள் அவரை விட்டு  தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.
நூல்;புஹாரி எண் 6820
 
மற்றொரு அறிவிப்பில்,
 
மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 6824
 
அன்பானவர்களே! சஹாபாக்கள் சாமான்யர்கள்; அவர்கள் பல்வேறு குற்றங்களை செய்தவர்கள் என்று சஹாபாக்களை விட தம்மையும், தமது கருத்தையும் முன்னிலைப்  படுத்துபவர்கள் இடும் பட்டியலில் மாயிஸ்[ரலி] அவர்களின் மேற்கண்ட சம்பவமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், உண்மை நிலை  என்ன..?
 
சஹாபாக்கள் இயன்றவரை பாவம் செய்வதை தவிர்ந்து வாழ்ந்தவர்கள். இருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடத்தில் தப்பித்தவறி தவறு ஏற்படுமேயானால், அந்த தவறுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையைக் குறித்து அஞ்சியிருக்கிறார்கள். மறுமைத் தண்டனையை விட  இம்மையில் கிடைக்கும் தண்டனை இலகுவானது என்று எண்ணி, தாமாக விரும்பி வந்து தண்டனையை  ஏற்றுள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட மாயிஸ்[ரலி] அவர்களின் சம்பவமே சான்று. மாயிஸ்[ரலி] அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர் அல்ல. மாறாக,
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் இறையச்சம்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்களை நோக்கி இழுத்து வந்தது. அங்கே மாயிஸ்[ரலி] குற்றத்தை சொல்லி தண்டனை கேட்டபோது, மாயிஸ்[ரலி] அவர்களின் நற்குணத்தை அறிந்த  நபியவர்கள்,
 
'உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ்[ரலி] அவர்களை திருப்பி அனுப்ப முயற்ச்சிக்கிறார்கள். இறுதியாக மாயிஸ்[ரலி] அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால்தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காத நிலையிலும், இறைவன் பார்க்கிறான் என்ற அச்சத்தில் ஒரு வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் அதை ஏற்க மனமின்றி 'சப்பைக்கட்டு'  கட்டுவதைக் காண்கிறோம்.  காரணம் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் இந்த உலகில் நம்முடைய 'இமேஜ்' அடிபட்டுப் போகுமே என்று கருதுகிறர்கள்.
 
ஆனால் சஹாபாக்கள் இந்த உலகில் தமது 'இமேஜ்' பாதிக்கப்படுவதையோ, அல்லது தண்டனையின் வேதனை குறித்தோ அஞ்சவில்லை. மாறாக மறுமையின் விசாரணையும், அவமானத்தையும், வேதனையையும் குறித்தே அஞ்சினார்கள். அன்று அவர்கள் விரும்பி ஏற்ற தணடனை இன்று அவர்களை சரித்திர புருஷர்களாக பலநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் நினைவு கூற செய்கிறது. எனவேதான் அந்த நல்லறத்  தோழர்களின் இடத்தை ஒருபோதும் நாம் எட்டிட முடியாது எனபது திண்ணம்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

1 கருத்து: