சனி, 18 செப்டம்பர், 2010

பொறுமையை கொண்டு சுவனத்தை வென்ற பெண்மணி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்;


இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
 
இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்; புஹாரி எண் 5652
 
அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை  பார்க்கிறோம்.
 
இன்னும் சிலர் அல்லாஹ்விடம் கேட்டு எந்த பலனுமில்லை என்று தீர்மானித்து, தர்காவிடம்  சரணடைந்து அங்கே ஈமானையும் பறிகொடுத்து, சில நேரங்களில் கற்பு- பொருளாதாரம் இவ்வாறாக பல்வேறு இழப்புகளை தமக்கு தாமே ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம்.
 
ஆனால், மேலே உள்ள பொன்மொழியில், ஒரு பெண்மணி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர், தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபியவர்களிடம் வேண்ட, அப்பெண்மணியின்  இம்மை வாழ்வின்   சுகத்தை விட மறுமை பாக்கியம் அப்பெண்ணிற்கு கிடைக்கவேண்டும் என விரும்பிய இறைத்தூதர்[ஸல்] அவர்கள், உனக்கு நிவாரணம் வேண்டுமா; அல்லது சொர்க்கம் வேண்டுமா என்று கேட்ட மாத்திரமே,
 
தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை போருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை  பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட  தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணி இறைத்தூதரிடம் வேண்டுகிறார்களே! அதுதான் நபித் தோழியர்களின் இறையச்சம்.
 
ஆனால், இன்றைக்கு நம்முடைய பெண்களில் பெரும்பாலோர், பர்தா அணிவதில்லை. அதோடு அணிந்திருக்கும் சேலை தலையிலிருந்து நழுவினாலோ, அல்லது முன்பகுதியிலிருந்து விலகினாலோ கூட பெரும்பாலும் அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நம்முடைய பெண்களை நவீனம் அந்த அளவுக்கு நாசமாக்கியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு மட்டுமின்றி, அழகிய பொறுமைக்கும் இந்த நபித் தோழியின்  வாழ்வில்   மிகப்பெரும் படிப்பினை உள்ளது.
 
எல்லாம் வல்ல அல்லாஹ், நிறத்தால் கருப்பான, உள்ளத்தால் வெண்மையான அந்த நபித் தோழியை சுவனத்தில் பார்க்கும் பாக்கியத்தை நமக்குத் தந்தருள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக