ஞாயிறு, 22 நவம்பர், 2009

மறைச்செய்தி முடிந்துவிட்டதே..! மனமடைந்த நபித்தோழி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உம்மு அய்மன்[ரலி] அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிற்குரிய இடத்தை பெற்ற நபித்தோழியராவார். இந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள் மீதும் இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நபி[ஸல்] அவர்கள், தனது பேரர்கள் மீது கொண்ட அளவுக்கு நேசம் வைத்திருந்தார்கள். உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்களை நாம் அறிந்துவைத்துள்ளோம். இந்த உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்கள் மீது நபி[ஸல்] அவர்கள் கொண்ட பாசம் எத்தகையது..?

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து 'இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!" என்று பிரார்த்திப்பார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3735 ]

இப்படி ஹஸன்(ரலி) அவர்களுக்கு இணையான பாசத்தை நபியவர்களிடம் கொண்ட இந்த உஸாமா[ரலி] அவர்கள் யார் என்றால் உம்மு அய்மன்[ரலி] அவர்களின் மகனாவார்.
நபியவர்கள் ஒருமுறை தம் தோழர்களின் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்கள். ‘எவரேனும் சுவனத்துப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அவர் உம்மு ஐமனை மணந்து கொள்ளட்டும்!”
இதனைக் கேட்டதும் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் உம்மு ஐமனை மணந்து கொண்டார்கள். நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு இத்தம்பதிக்கு உஸாமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். தந்தை ஜைத் (ரலி) அவர்களைப் போன்று உஸாமா (ரலி) அவர்களும் நபியவர்களின் அன்பிற்குரித்தானவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

இந்த உஸாமா[ரலி] மட்டுமல்ல உம்மு ஐமனின் ஏனைய பிள்ளைகள் மீதும் நபி[ஸல்]அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார்;
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் இப்னு அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜாஜை நோக்கி), 'திரும்பத் தொழுங்கள்" என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர்(ரலி), 'யார் இவர்?' என்று கேட்டார்கள். நான், 'உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர்" என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர்(ரலி), 'இவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள்" என்று கூறினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், (உஸாமா - ரலி - அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன்(ரலி) பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர்(ரலி) நினைவு கூர்ந்தார்கள். அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: உம்மு அய்மன்(ரலி) நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.
ஆதாரம்புஹாரி எண் 3737

மேலும் தனக்கு கிடைத்த அன்பளிப்பு பேரிச்சமரங்களையும் உம்மு அய்மன்[ரலி] அவர்களுக்கே நபி[ஸல்]அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில் ) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
ஆதாரம்புஹாரி;எண் 2630

இந்த அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரியவராக திகழ்ந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள், ஹிஜ்ரத் செய்த முஹாஜிராகவும், உஹத்-கைபர் உள்ளிட்ட சில போர்களில் படை வீரர்களுக்கு சேவையாற்றி வீரப் பெண்மணியாகவும் திகழ்ந்துள்ளார்கள். அதுமட்டுமன்றி இறைவேதத்தின் மீது தீராத நேசம் கொண்டவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ‘ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.” அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ‘இதுதான் எனக்குத் தெறியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!” என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் manamum இளகியது. அவர்களும் அழலாயினர். - ஸஹீஹ் முஸ்லிம்.
ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ‘இறைவனின் விதிப்படி நபியவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெறியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்” என்று பதில் அளித்தார்கள்.


அன்பானவர்களே! இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் ஏனைய சகாபாக்கள் இறைத் தூதரின் பிரிவை எண்ணி வாடிக்கொண்டிருக்க, உம்மு அய்மன்[ரலி] அவர்கள் அதையும் தாண்டி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்துவிட்டதால், இறைச்செய்தி இனிவராதே! இறைவனின் கட்டளைகள் நின்றுவிட்டதே என்று வருந்தி கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். அன்று உம்மு அய்மன்[ரலி] அவர்கள் நேசித்த இறைச்செய்தி இன்றும் நம்மிடையே இருக்கிறது. ஆனால் உம்மு ஐமன்[ரலி] அவர்களை போன்று நேசம் நாம் வைத்துள்ளோமா என்றால், பெரும்பாலோர் வைக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். காரணம் இறைச்செய்தி மீது யார் நேசம் கொள்வார்கள் என்றால்அந்த செய்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய கட்டளை. அதற்கு கட்டுப்படவேண்டும் என்றசிந்தனை எவருடைய உள்ளத்தில் உள்ளதோ அவர்தான் இறைச்செய்தியை நேசிப்பார். ஆனால் நம்முடைய வாழ்வில் தனிமனிதனின் சொந்த கருத்துக்கு கட்டுப்படும் அளவுக்கு கூட இறைச்செய்திக்கு கட்டுப்படவில்லை என்பதே உண்மை. எனவே உம்மு அய்மன்[ரலி] அவர்களைப்போல் இறைச்செய்தியை நம் வாழ்வில் அமுல்படுத்துவதன் மூலம் அதை நேசிப்போம் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக