வெள்ளி, 21 அக்டோபர், 2011

இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்கள்;

ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'முபாஹலா - சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து; நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருவப்படமாட்டார்கள்'' என்று கூறினார்.


(பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), 'நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்'' என்று கூறினார்கள். நூல்;புஹாரி.

மேற்கண்ட பொன்மொழியில் நஜ்ரான் நாட்டினரோடு செல்வதில் நபித் தோழர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சீறத் இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு செய்தியை தஃப்சீர் மேதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது திருக்குர்ஆண் விரிவுரையில் பதிவு செய்துள்ளார்கள்.

''நபி[ஸல்] அவர்களிடம் வந்த கிறிஸ்தவர்கள்,''அபுல்காசிமே! உம்மோடு நாங்கள் சாப அழைப்புப் பிரமாணம் செய்யவேண்டாம் என்றே கருதுகிறோம். உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.நாங்கள் எங்கள் மார்க்கத்தில் இருந்தபடியே திரும்பிச் சென்று விடுகிறோம்.எனினும், உம்முடைய தோழர்களில் நீர் விரும்பும் ஒருவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் எங்களிடையே தீர்ப்பு வழங்கட்டும். ஏனெனில், நீங்கள் எங்களது அபிமானத்தைப் பெற்றவர்கள் என்றனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்,''மாலையில் என்னிடம் வாருங்கள்;நம்பத்தகுந்த வலிமை மிகக் ஒருவரை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார்கள்.

உமர்[ரலி] அவர்கள் கூறியதாவது; அன்று நான் பதவியை விரும்பியது போன்று ஒருபோதும் விரும்பியதே இல்லை. நபி[ஸல்] அவர்கள் குறிப்பிட்ட அந்த ஒருவர் நானாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தேன். எனவே, அன்றைய லுஹர் தொழுகைக்கு விரைவாகவே வந்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், லுஹர் தொழுகை முடித்து ஸலாம் கொடுத்துவிட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காக தலையை தூக்கி காண்பித்தேன்.

ஆயினும் வேறு யாரோ ஒருவரை நபி[ஸல்] அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்.இறுதியில் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களைப் பார்த்ததும், அவரை அழைத்து, ''அந்த கிறிஸ்தவர்களுடன் புறப்படுங்கள்; அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பிரச்சினைகளில் அவர்களுக்கிடையே சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள்'' என்றார்கள். பின்னர் அந்தக் குழுவினருடன் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி]  அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.

ஈஸா[அலை] குறித்து விவாதம் செய்ய வந்த நஜ்ரான் பகுதி கிறிஸ்தவ குழுவினரிடம், 'முபாஹலா' அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அதிலிருந்து பின் வாங்கி செல்கையில், தங்களுடன் ஒரு நம்பகமானவரை அனுப்பிட நபியவர்களை கேட்டபோது, அந்த நம்பகமானவர் நாமாக இருக்கவேண்டும், நாம் இந்த குழுவினரோடு சென்றால் இவர்களுக்கு தாஃவா செய்யலாம் என்று ஆசை கொள்கிறார்கள் உமர்[ரலி] அவர்கள். ஆனால் அவர்களுக்கு கூட கிடைக்காத அந்த அருமையான வாய்ப்பு அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களுக்கு கிடைத்தது என்று மேற்கண்ட இந்த வரலாற்று செய்தியில் நாம் காண்கிறோம். அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்கள் இந்த சமுதாயத்தின் நம்பகமானவர் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியுள்ளதோடு, மற்றொரு கட்டத்தில் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் சுவனத்தைக் கொண்டு நன்மாராயமும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இறைத்தூதரின் ஹவாரீ[உதவியாளர்] ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி)


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்;

"அகழ்ப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), 'நான்" என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும்; எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள். பிறகு, 'எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்?' என்று (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர்(ரலி), 'நான்" என்று கூறினார்கள்.


பிறகு நபி(ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்" என்று கூறினார்கள்.  நூல்; புஹாரி

இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்''
அல்-குர்'ஆன் 3 ;37
மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;

ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.

பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு
முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.

மேற்கண்ட பொன்மொழியில் அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்களின் பல நற்பண்புகள் மற்றும் இறையச்சம் மிளிர்வதைக் காணலாம். தனக்கு ஏதேனும் உணவு கிடைத்தால், அன்னை மர்யம்[அலை] அவர்கள் எப்படி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தி, ''அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்களோ, அதே போன்று அன்னை பாத்திமா[ரலி] அவர்களும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் குணத்தை கொண்டுள்ளதால், அன்னை பாத்திமா[ரலி] அவர்களை, அன்னை மர்யம்[அலை] அவர்களோடு ஒப்பிட்டு நபி[ஸல்] அவர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், நமக்கு ஒரு நலம் விளையுமானால் இது அவரால் விளைந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வாத்தை நம்மிடம் வெளிப்படவேண்டும். அவ்வாறு அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும்.

 எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னை மர்யம்[அலை] மற்றும் அன்னை ஃபாத்திமா[ரலி] ஆகியோர் மீது நல்லருளை நல்கிடுவானாக! 

சனி, 1 அக்டோபர், 2011

அவதூறு பரப்பியவர் மீதும் அன்பு காட்டிய அன்னை ஆயிஷா[ரலி]

بسم الله الرحمن الرحيم

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது அவர்கள் அடைந்த வேதனையை வெளிப்படுத்தும் அவர்களின் வார்த்தையிலிருந்து சிறு பகுதி;
'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை.
ஹதீஸ் சுருக்கம், நூல்;புஹாரி,எண் 2661

அபாண்ட அவதூறால் உள்ளம் உடைந்து அழுது, அழுது கண்ணீர் வற்றும் அளவுக்கு அன்னையவர்கள் வேதனைப்பட்டுள்ளார்களே! அத்தகைய அவதூறை பரப்பியவர்களில் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்[ரலி] அவர்களும் ஒருவர். இதை மனதில்கொண்டு கீழுள்ள செய்தியை படியுங்கள்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்;
நான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி)களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும்போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுத்து போன்று உங்களை உருவி எடுத்து விடுவேன்" என்று கூறினார். நூல்;புஹாரி,எண் 4145

தன்னைக்குறித்து அவதூறு பரப்பியவர்களில் ஒருவரை 'திட்டாதீர்கள்' என்று அன்னையவர்கள் பெருந்தன்மையோடு சொன்னார்களே! இந்த பண்பு நம்மிடம் இன்றைக்கு உள்ளதா? ஒருவன் தனக்கு எதிரான கருத்தை உரிய சான்றுகளுடன் சுட்டிக்காட்டினால் கூட, அவனது கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, அவனை விட்டேனா பார்' என்று எதிரியின் பிறப்பிலிருந்து ஆய்வுசெய்து அவன் செய்த சிறிய/பெரிய தனிப்பட்ட தவறுகள் அத்துனையையும் பரப்புவது.
மேலும், இவ்வாறு அவதூறுகள் நம்மில் பலர் மத்தியில் அதிகமானதுக்கு காரணம் 'என்னையே எதிர்க்க துணிந்து விட்டானா? என்ற ஆணவம் சிலருக்கு.

ஆனால், அருமை சஹாபாக்கள்  இந்தவிசயத்தில் எப்படி மன்னிக்கும் தன்மையை கையாண்டுள்ளார்கள் என்பதற்கு அன்னை ஆயிஷா[ரலி]   ஒரு அற்புதமான சான்றாக திகழ்கிறார்கள். இந்த பண்பு நமக்கு வந்துவிட்டாலே பாதி அவதூறு மறைந்துவிடும். நடுநிலையோடு சிந்திப்போம்! நன்மையை மட்டும் பரப்புவோம்.