மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி)அவர்கள் கூறினார்கள்:)
நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்" என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது.
[புஹாரி எண் 3952 ]
அன்பானவர்களே! பத்ர் போர் எதிர்பாராமல் நடந்த ஒரு போராகும். இதில் எதிரிகளுக்கு சமமான எண்ணிக்கையில் முஸ்லிம் வீரர்களோ, தளவாடங்களோ இன்றி அவர்களின் ஈமானிய உறுதியுடனும் அல்லாஹ்வின் உதவியுடனும் வெற்றி பெற்ற போராகும். இந்தப் போரின்போது அல்லாஹ்விடம் இறைஞ்சிய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு, சத்திய சஹாபாக்கள் தந்த உறுதிமொழி தெம்பூட்டியது. அதிலும் குறிப்பாக, மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி)அவர்கள் சொன்ன வார்த்தை அவர்களை மகிழ்வித்தது.
எதிரிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒருபகுதியினராக இருக்கும் நிலையில், உரிய போர்த் தளவாடங்கள் இல்லாத நிலையில், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில், இறைத்தூதரே! உங்களுக்கு அணிகலன்களாக நாங்கள் இருக்கிறோம்; எதற்கும் அஞ்சாதீர்கள் என்று சொல்லும் துணிச்சல் அந்த மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களுக்கு இருந்தது என்று சொன்னால், அவரின் வழிவந்த நாம் எவரோ ஒரு ஆட்சியாளரை கண்டு அஞ்சவேண்டிய அவசியமென்ன? இந்த உயிர் இறைவனால் வழங்கப்பட்டது; அவனுக்காகவே சென்றால் ஆனந்தமே என்ற மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் உள்ள உறுதியை நாமும் பெறவேண்டும். அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக