சனி, 18 ஆகஸ்ட், 2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!
  
உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த'பெருநாள் நல் வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!!

என்றும் இறைப்பணியில்,

உங்கள் இஸ்லாமிய சகோதரன்..
முகவைஅப்பாஸ்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

“என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” உண்மையாளர் அபூபக்கர்[ ரலி]யின் உருக்கம்!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஆயித் பின் அம்ர் [ரலி] அவர்கள் அறிவித்தார்கள் :
ஸல்மான் [ரலி], சுஹைப்[ரலி], பிலால் [ரலி] ஆகியோர் கொண்ட குழுவிடம்(அப்போது இஸ்லாத்தை ஏற்றிராத) அபூசுஃப்யான் வந்தார்.  அப்போது அக்குழுவினர்,  “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் எதிரியான இவர் கழுத்தில் இன்னும் வாட்கள் பதம்பார்க்கவில்லையே! என்று கூறினார்கள்.  

அப்போது அபூபக்ர் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள், 
“குறைஷியரில் மூத்தவரும் தலைவருமான இவரைப் பார்த்தா இப்படிக் கூறுகிறீர்கள்” என்று சொன்னார்கள்.  பின்னர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைக் கூறியபோது அபூபக்ரே! நீங்கள் அக்குழுவினரைக் கோபமுண்டாக்கியிருப்பீர்கள் போலும், அவர்களை நீங்கள் கோபமுண்டாக்கியிருந்தால் உங்கள் இரட்சகனை நீங்கள் கோபமுண்டாக்கிவிட்டீர்கள்” என்று கூறினார்கள். 

 உடனே அபூபக்ர்[ரலி] அவர்கள், அக்குழுவினரிடம் வந்து,  “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” என்று கேட்டார்கள்.  அதற்கு அவர்கள், “இல்லை! எங்கள் 
சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்.[நூல்; முஸ்லிம்]

இந்தப் பொன்மொழியில், அபூசுப்யான்  குறைஷியர் மத்தியில் பெரிய அந்தஸ்துக்குரியவராக இருந்த போதிலும்  அவர் முஸ்லிம்களுக்கு எதிரான காரியங்களை செய்யக்கூடியவராகவும்  இருந்ததினால் அவர் மீது பிலால்[ரலி] உள்ளிட்ட சஹாபாக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக உதிர்த்த வார்த்தைகளை கண்ட அபூபக்கர் ரலி அவர்கள், என்னதான் அவர் இஸ்லாமிய விரோதியாக இருந்தாலும் அபூசுபயான் குறைஷியர்களில் மூத்தவர் என்ற அடிப்படையில் அந்த வார்த்தைகளை ஆட்சேபிக்கிறார்கள்.

ஆனாலும், அபூபக்கர் ரலி அவர்களின் இந்த செயல் அந்த மூன்று தோழர்களையும் கோபத்திற்குள்ளாக்கி இருக்குமானால் அது அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத்தரும் என்று நபி [ஸல்] அவர்கள் சொன்ன மாத்திரமே, அல்லாஹ்வின் கோபம் நம்மீது ஏற்படாமல் இருக்க ஒரே வழி சம்மந்தப்பட்ட தோழர்களிடம் வருத்தம் தெரிவிப்பதே என உணர்ந்த அபூபக்கர் ரலி அவர்கள், எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக பிலால் [ரலி] உள்ளிட்ட தோழர்களிடம் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபமுண்டாக்கிவிட்டேனா?” என்று கேட்கிறார்கள் என்றால் இங்கேதான்  அபூபக்ர் ரலி அவர்களின் அழகிய பண்பையும், அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றே லட்சியம் என்ற அவர்களின் வாழ்க்கையும் நம்மால் உணரமுடிகிறது. 

இன்றைக்கு நம்மவர்களின் நிலை என்ன? சக சகோதர்களை எவ்வித முகாந்திரமுமின்றி கோபம் உண்டாக்கக் கூடிய, அவர்களின் மானத்தோடு விளையாடக்கூடிய செயலை சர்வசாதரணமாக செய்வதோடு அதை அழைப்புப் பணியின் ஒரு அங்கம் என்றே எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள். சக சகோதரன் விசயத்தில் தனது செயல் தவறு என்று தெரிந்த பின்பும் சம்மந்தப்பட்டவரிடம் வருத்தம் தெரிவித்து தன்னை அந்த பாவத்திலிருந்து மீட்பதற்குப் பதிலாக, தனது தவறை மறைக்க ஆயிரம் வியாக்கியானம் சொல்லியேனும்  நியாயப்படுத்தும் காட்சியைப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் காரணம் சாதாரணமான இவனிடம் நான் மன்னிப்புக் கேட்பதா என்ற ஆணவம் என்று கூட சொல்லலாம். ஆனால் இந்த உம்மத்தின் சிறந்த ஈமானுடயவர் என்றும் சுவனத்தைக் கொண்டும் நபியவர்களால் நன்மாராயம் சொல்லப்பட்ட அபூபக்கர் ரலி அவர்கள், தனது தவறை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை என்பதை உணர்ந்து, இந்த பண்பை வளர்த்துக் கொள்ள நாமும் முன்வரவேண்டும். அதுதான் இறைவனின் திருப்தியையும், சக சகோதரர்களிடம்  இணக்கத்தையும் உண்டாக்கும்.