நபி[ஸல்] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்களை 'கைபர்' எனுமிடத்தில் வசித்த யூதர்களுக்கு கிடைக்கும் கனி வகைகளையும் விளைபொருட்களையும் மதிப்பீடு செய்து வருமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அந்த யூதர்கள், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள் கருணையோடு நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டனர்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! படைப்புகளிலேயே எனக்கு பிரியமான ஒருவரிடமிருந்து[நபி[ஸல்] அவர்களிடமிருந்து] நான் உங்களிடம் வந்துள்ளேன். ஆனால் நீங்களோ, குரங்குகளாகவும்- பன்றிகளாகவும் அல்லாஹ்வால் உருமாற்றம் செய்யப்பட்ட உங்களின் மூதாதையரை விட எனக்கு மிகவும் பிடிக்காதவர்கள். ஆயினும், நபி[ஸல்] அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் நேசமோ, உங்கள் மீது எனக்குள்ள வெறுப்போ உங்கள் விசயத்தில் நான் நீதி தவறுவதற்கு காரணமாக இருக்காது என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள், வானங்களும் பூமியும் இன்னமும் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறினார்கள்.
நூல்; அஹ்மத், முவத்தா மாலிக்.
யூதர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாத்திற்கு பகைவர்களாகவே இருந்து வருகின்றனர் என்பதற்கு அன்றைய காலம் முதல் இன்றைய இஸ்ரேல் வரை சான்று பகர்கிறது. இஸ்லாத்தின் விரோதிகள் என்ற அடிப்படையில் 'கைபர்' யூதர்கள் மீது தனக்கு வெறுப்பு இருந்தபோதிலும், தனது வெறுப்பு அவர்களது விசயத்தில் எந்த வகையிலும் நீதிக்கு மாற்றமாக அமைந்துவிடாது என்று உறுதியளிக்கிறார்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா[ரலி] அவர்கள்.
ஆம்! இத்தகைய நீதியாளர்களைத் தான் நபியவர்கள் உருவாக்கினார்கள். மேலும், முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8]
என்ற இறைவாக்கைப் பேணியவர்கள் இந்த சஹாபாக்கள்.
ஆனால் இன்று நமது நிலை என்ன? நமக்கு ஒருவர் மீது நேசமும்- ஒருவர் மீது வெறுப்பும் வந்துவிட்டால் அங்கே நீதி கொல்லப்படுகிறது. தனது நேசத்திற்குரியவர் அடுத்தவரின் அமைப்பை அபகரித்தபோதும் அதை நியாப்படுத்தும் அளவுக்கு ஒருவர் மீது கொண்ட நேசமோ, அல்லது அவர் மீது உள்ள பயமோ நம்மை மாற்றுகிறது என்றால், இப்படிப்பட்டவர்கள் இந்த சஹாபியின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும். ஒரு முஸ்லிம் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு இந்த நபித்தோழர் நல்லதொரு உதாரணமாவார்.