வெள்ளி, 21 அக்டோபர், 2011

இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்கள்;

ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'முபாஹலா - சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து; நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருவப்படமாட்டார்கள்'' என்று கூறினார்.


(பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), 'நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்'' என்று கூறினார்கள். நூல்;புஹாரி.

மேற்கண்ட பொன்மொழியில் நஜ்ரான் நாட்டினரோடு செல்வதில் நபித் தோழர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி சீறத் இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்ற ஒரு செய்தியை தஃப்சீர் மேதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது திருக்குர்ஆண் விரிவுரையில் பதிவு செய்துள்ளார்கள்.

''நபி[ஸல்] அவர்களிடம் வந்த கிறிஸ்தவர்கள்,''அபுல்காசிமே! உம்மோடு நாங்கள் சாப அழைப்புப் பிரமாணம் செய்யவேண்டாம் என்றே கருதுகிறோம். உங்கள் மார்க்கத்தில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.நாங்கள் எங்கள் மார்க்கத்தில் இருந்தபடியே திரும்பிச் சென்று விடுகிறோம்.எனினும், உம்முடைய தோழர்களில் நீர் விரும்பும் ஒருவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் எங்களிடையே தீர்ப்பு வழங்கட்டும். ஏனெனில், நீங்கள் எங்களது அபிமானத்தைப் பெற்றவர்கள் என்றனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்,''மாலையில் என்னிடம் வாருங்கள்;நம்பத்தகுந்த வலிமை மிகக் ஒருவரை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்றார்கள்.

உமர்[ரலி] அவர்கள் கூறியதாவது; அன்று நான் பதவியை விரும்பியது போன்று ஒருபோதும் விரும்பியதே இல்லை. நபி[ஸல்] அவர்கள் குறிப்பிட்ட அந்த ஒருவர் நானாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தேன். எனவே, அன்றைய லுஹர் தொழுகைக்கு விரைவாகவே வந்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், லுஹர் தொழுகை முடித்து ஸலாம் கொடுத்துவிட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்பதற்காக தலையை தூக்கி காண்பித்தேன்.

ஆயினும் வேறு யாரோ ஒருவரை நபி[ஸல்] அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள்.இறுதியில் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களைப் பார்த்ததும், அவரை அழைத்து, ''அந்த கிறிஸ்தவர்களுடன் புறப்படுங்கள்; அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பிரச்சினைகளில் அவர்களுக்கிடையே சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள்'' என்றார்கள். பின்னர் அந்தக் குழுவினருடன் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்[ரலி]  அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.

ஈஸா[அலை] குறித்து விவாதம் செய்ய வந்த நஜ்ரான் பகுதி கிறிஸ்தவ குழுவினரிடம், 'முபாஹலா' அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அதிலிருந்து பின் வாங்கி செல்கையில், தங்களுடன் ஒரு நம்பகமானவரை அனுப்பிட நபியவர்களை கேட்டபோது, அந்த நம்பகமானவர் நாமாக இருக்கவேண்டும், நாம் இந்த குழுவினரோடு சென்றால் இவர்களுக்கு தாஃவா செய்யலாம் என்று ஆசை கொள்கிறார்கள் உமர்[ரலி] அவர்கள். ஆனால் அவர்களுக்கு கூட கிடைக்காத அந்த அருமையான வாய்ப்பு அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்களுக்கு கிடைத்தது என்று மேற்கண்ட இந்த வரலாற்று செய்தியில் நாம் காண்கிறோம். அபூ உபைதா அல்ஜர்ராஹ்[ரலி] அவர்கள் இந்த சமுதாயத்தின் நம்பகமானவர் என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியுள்ளதோடு, மற்றொரு கட்டத்தில் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் சுவனத்தைக் கொண்டு நன்மாராயமும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக