வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எமது சொல்லும், செயலும் இஸ்லாமே என வாழ்ந்தவர்!

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்;

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை
குத்திவிடும் பெண்கள், பச்சை
குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். நூல்;புஹாரி எண் 4886
 
அன்பானவர்களே! நபித் தோழர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், பச்சை குத்துவது உள்ளிட்ட அல்லாஹ் வடிவமைத்ததை மாற்றுபவர்களை சபிக்கிறார்கள். இச்செய்தி ஒரு பெண்மணிக்கு எட்டுகிறது. சரி! சொன்னவர் சாமான்யர் அல்ல. ஒரு உயர்வான நபித்தோழர். எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் வந்து உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்..? என்கிறார். இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப் பட்டுள்ளவர்களை நான் சபிக்கக் கூடாதா என்கிறார்கள். அப்போதும் அப்பெண்மணி விடவில்லை. குர்ஆணை முழுமையாக ஒதியுள்ளேன் எனவே நீங்கள் கூறுவது போல இல்லையே என்கிறார். இந்த அளவுக்கு சஹாபிப் பெண்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். குர்ஆணோடு முழு தொடர்போடு இருந்துள்ளார்கள். ஒருவர் கூறும் சட்டம் குர்ஆனில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு குர்ஆணை முழுமையாக மனனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம்முடைய பெண்கள்  மட்டுமல்ல; ஆண்களில் கூட  பெரும்பாலோருக்கு குர்ஆண்  ஓத தெரிவதில்லை. காரணம் போடுபோக்குத்தான். எதுவா இருந்தாலும் ஆலிம்ஷாக்களிடம் கேட்டுக்கொள்வோம். அவர்கள் சொல்வதை அப்படியே அமுல்படுத்துவோம் என்ற மெத்தனப்போக்குத்தானே  இத்தனை குழப்பங்களுக்கு வழிவகுத்தது..? இது ஒருபுறமிருக்க, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் அப்பெண்மணி, 'எல்லாம் சரிதான் ஆனா ஒங்க வீட்டுல ஒங்க துணைவியார் செய்கிறாகளாமே' என இழுக்க, சட்டென இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் என் வீட்டில் போய் பாருங்கள் என்கிறார்கள். அதோடு இறுதியாக, என் மனைவி மட்டும் அப்படி செய்பவளாக இருந்தால் அவளோடு நான் சேர்ந்து வாழமாட்டேன் என்கிறார்கள் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். இன்றைக்கு வெளியிலே மார்க்க சட்டம் பேசக்கூடிய நம்மில் பலரின் வீட்டில் நாம் பேசக்கூடிய சட்டங்கள் பெரும்பாலும் நமது குடும்பத்தாரால் அமுல்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. அவ்வளவு ஏன்..? பல நேரங்களில் நாமே பல அமல்களை கோட்டை விடக்கூடியவர்களாக இருக்கிறோம். 'ஊருக்குத்தான் உபதேசம்'  என்பதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் உள்ளன.ஆனால் அருமை சஹாபா பெருமக்கள் சொல்லிலும் செயலிலும் தூய்மையாளர்களாக திகழ்ந்ததோடு, தந்து குடும்பத்தார் விசயத்திலும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களின் இந்த செய்தி உணர்த்துகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை சொல்லில் மட்டுமல்ல; செயலிலும் கடைபிடிக்க அருள்புரிவானாக!

'பட்டு' இவரது கைக்குட்டைக்கு கிட்ட நிற்குமா ...?

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் .
அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத்(ரலி) தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நாங்கள் இன்னும்  ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு 'எங்கே? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது 'பனூ குறைழா' குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே,  உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள்.(பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை... அல்லது உங்களில் சிறந்த வரை... நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்" என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்."... அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்" என்று கூறினார்கள்.
நூல்; புஹாரி எண் 4121 எண் 4122
 
ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள். இந்த கோத்திரத்தாரோடு பனூகுறைளா கோத்திரத்தார் நட்புறவு பாராட்டி வந்தனர். எனவே அவ்ஸ் கோத்திரத்தின் தலைவரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்குவார்கள் என கருதினார்கள். ஆனால் அல்லாஹ்வின் நேசரான ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களோ, இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடியவர்களாக, அவன் விரும்பும் தீர்ப்பை பனூகுறைலாக்கள் விசயத்தில் வழங்குகிறார்கள். அதற்காக அல்லாஹ்வின் தீர்பபுப் படியே தீர்ப்பளித்தீர்கள் என்று நபியவர்களால் பாராட்டப் படுகிறார்கள். மேலும் ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் நேசம் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள். அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது அவதூறு சொல்லப்பட்டபோது, இறைத்தூதர் அவர்களே! அவதூறு சொன்னவர்களில்  எனது கோத்திரத்தார் இருந்து, நீங்கள் உத்தரவிட்டால் அவனது கழுத்தை நான் துண்டிக்கிறேன் என்று முழங்கியவர். அதுபோலவே ஸஅத் ரலி அவர்கள் மீது நபி[ஸல்] வர்களும் மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். எனவேதான் போரில் ஸஅத் [ரலி] அவர்கள் காயமுற்றவுடன்  அவர்களை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்காக மஸ்ஜிதுன் நபவியிலேயே அவருக்காக கூடாரம் அமைத்து கவனித்தார்கள். நபியவர்கள் மட்டுமன்றி, அல்லாஹ்வும் ஸஅத்[ரலி] அவர்களை நேசித்தான் என்பதற்கு, ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது [புஹாரி] சான்றாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸஅத் இப்னு முஆத்[ரலி] அவர்களுக்கு மகத்தான சுவன பதவிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அது குறித்து அறிந்துகொள்ள ஒரு பொன்மொழி;
 
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆ
துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.[புஹாரி எண் 2615 ]
 
எங்கள் இறைவா! உனது திருப்தியே இலக்காக கொண்டு வாழ்ந்த அந்த நல்லறத்தோழர்களின் வழியில் எங்களையும் வாழ அருள்புரிவாயாக!

புதன், 25 ஆகஸ்ட், 2010

இறைவனுக்கு எதிரிகள்; எங்களுக்கும் எதிரிகளே!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் குறித்து, நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்" என்று கூறினார்கள்.

பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் "கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஸா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஸா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்" என்று உமர் (ரழி) கூறினார்கள்.

அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். உமர் (ரழி) கூறுகிறார்கள்:
 
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) விரும்பினார்கள். நான் கூறியதை விரும்பவில்லை. எனவே கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். அதற்கு அடுத்த நாள் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அழுதவர்களாக இருந்தார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்களது தோழரும் ஏன் அழுகிறீர்கள்? அழுகைக்குரிய செய்தி எதுவும் இருப்பின், முடிந்தால் நானும் அழுகிறேன். முடியவில்லையென்றால் நீங்கள் அழுவதற்காக நானும் அழ முயல்கிறேன்" என்றேன். அதற்கு நபி (ஸல்) "ஈட்டுத்தொகை வாங்கியதின் காரணமாக உமது தோழர்களுக்கு ஏற்பட்டதை எண்ணி நான் அழுகிறேன். அருகில் உள்ள ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்து இம்மரத்தை விட நெருக்கமாக அவர்களுக்குரிய வேதனை எனக்குக் காண்பிக்கப்பட்டது" என்றார்கள்.

இது தொடர்பாகவே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளைக் கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்வை விரும்புகிறான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்விடம் (பத்ர் போரில் கலந்த முஸ்லிம்களுக்கு மன்னிப்பு உண்டு என்ற) விதி ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ர் போரில் கைதிகளிடமிருந்து ஈட்டுத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (அல்குர்ஆன் 8:67, 68)
நூல்; முஸ்லிம்.
 
அன்பானவர்களே! அல்லாஹ்வின் பகைவர்களை முதன்முதலில் வெற்றிகொண்டு இம்மண்ணில் ஏகத்துவத்தை நிலை நாட்டிய பத்ர் போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட கைதிகள்  குறித்து நபி[ஸல்] அவர்கள் ஆலோசித்தபோது, உமர்[ரலி] அவர்கள் கூறிய வார்த்தைகள் அவர்களது ஈமானிய உறுதியையும், இறைவன் மீது கொண்ட அளப்பரிய நேசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறைவனது பகைவர்கள்  என்னதான் எங்களின் ரத்தபந்தமாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகளே என்று கர்ஜித்த அந்த வீரமும், அல்லாஹ் பெரியவன்! அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப உமர்[ரலி] அவர்கள் மொழிந்தவையாகும். அதற்கு உமர்[ரலி] அவர்களின் கருத்தை ஆதரித்து அல்லாஹ் இறக்கிய வசனம் சான்றுபகர்கிறது. மேலும், இந்த வசனம் இறங்கிய மாத்திரமே அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்களும், தோழர்களும் அழுவதைக் கண்ட உமர்[ரலி] அவர்கள், இறைத்தூதர் அவர்களே! ஏன் அழுகிறீர்கள் என்று சொன்னால் நானும் அழுவேன். அழ முடியவில்லையாயின் அழுக முயற்ச்சிக்கிறேன் என்றார்களே உமர் அவர்கள். இதில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள்  மீது உமர்[ரலி] கொண்டிருந்த அளப்பரிய நேசம் வெளிப்படுவதை காணலாம். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தால் சிரித்து; அவர்கள் அழுதால் அழுது, எங்களுக்கென தனி சந்தோசம் எதுவுமில்லை; எங்கள் தலைவரின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி என்று வாழ்ந்த அந்த உத்தமத் தோழர்களை உலகம் உள்ளளவும் உண்மை முஃமின்களின் உள்ளம் நினைவு கூறும் இன்ஷா அல்லாஹ்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த நல்லறத் தோழர்களுக்கு சுவனத்தில் உயர்வான அந்தஸ்த்தை வழங்கிடுவானாக!

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

தங்கத்தை விட தாஹா நபியின் கட்டளைக்கு முன்னுரிமை தந்தவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
அம்ர் இப்னு ஷரீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ(ரலி) வந்து, 'ஸஅதே! எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஸஅத்(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!" என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர்(ரலி) அவர்கள், ஸஅத்(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!" என்றார்கள். அப்போது ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!" என்று கூறினார்கள். அதற்கு அபூ ராஃபிவு(ரலி), 'ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
ஆதாரம் புஹாரி எண் 2258
 
அன்பானவர்களே! நாம் நம்முடைய வீட்டை விற்பதாக இருந்தால் நமது வீட்டை வாங்கிக்கொள்கிறீர்களா என்று அண்டைவீட்டாரிடம் கேட்கத் தயங்குவோம். காரணம் பெரும்பாலும் அண்டை வீட்டினரோடு நமக்கு நல்லுறவு  இருப்பதில்லை. மேலும் நமது வீடோ அல்லது நிலமோ  மற்றவர்களுக்கு பயனளிப்பதைவிட நமது அண்டை வீட்டினருக்கே அதிக பயன்தரக் கூடியதாக இருக்கும். ஆனாலும் நாம் யார் அதிக விலை தருகிறாரோ அவருக்குத்தான் நமது வீட்டையோ,நிலத்தையோ விற்க முனவருவோம். காரணம் நமக்கு நபிகளாரின் கட்டளைகளை விட உலகத்தின் பொருளாதாரம் பிரதானமாக தெரிகிறது. ஆனால் மேற்கண்ட செய்தியில், அபூ ராஃபிஊ[ரலி] அவர்கள், ஐநூறு தங்க காசுகளுக்கு விலைக்கு கேட்கப்பட்ட தனது வீட்டை தனது அண்டை வீட்டினரான ஸஅத் இப்னு அபி வக்காஸ்[ரலி] அவர்களுக்கு, விலை குறைவாக நான்காயிரம் வெள்ளிக்காசுகளுக்கு அதுவும் தவணை  முறையில் வழங்குவதற்கு காரணம், 'அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவர்' என்ற நபியவர்களின் கட்டளைதான் என்பதைக் காணும்போது, அந்த நல்லறத் தோழர்களுக்கு முன்னால், உலகின் செல்வாமா..? அல்லது இறைத் தூதரின் கட்டளையா..? என்ற கேள்வி வருமாயின், உலகின் செல்வங்களுக்காக ஒருபோதும் எங்கள் நபியின் கட்டளையை உதாசீனப்படுத்தமாட்டோம் என்ற அவர்களின் கொள்கை உறுதி மெய்சிலிர்க்க செய்வதாக உள்ளது. ஆனால் நாம் இன்றைக்கு உலகின் வசதி வாய்ப்ப்புகளுக்காக இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக தெளிவான நபியவர்களின் கட்டளையை புறக்கணிப்பவர்களாக இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியதாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நபியவர்களின் கட்டளைக்கு அணுவளவேனும் மற்றம் செய்யாமல் நடந்த /நடக்க முயன்ற அந்த நல்லறத்தோழர்களை பொருந்திக் கொள்வானாக!

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

புகார் சொல்லும்போதும் 'புனைந்து' சொல்லாத மாதரசி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் கொள்கையை காக்கும் பொருட்டு முதன் முதலாக செய்யப்பட்ட ஹிஜ்ரத் அபிசீனியா ஹிஜ்ரத்தாகும். இந்த தியாகப் பயணத்தில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் [ரலி] அவர்களும் அவர்களது அருமை மனைவி அஸ்மா பின்த் உமைஸ் [ரலி] அவர்களும் அடங்குவர். பின்னாளில் நபி[ஸல்] அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவி, யூதர்களை கைபர் போரில் வெற்றி கொண்ட சமயத்தில் அபிசீனியாவில் இருந்த முஹாஜிர்கள் மதீனாவை வந்தடைந்தனர். அப்படி மதீனாவை வந்தடைந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களுக்கும், தியாக வேங்கை உமர்[ரலி] அவர்களுக்கும் ஒரு வாக்குவாதம். அதாவது அபிசீனியா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? அல்லது மதீனா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? என்று. இனி ஹதீஸில் இருந்து பார்ப்போம்;

[அபிசீனியாவில் இருந்து]மதீனாவிற்கு வந்தவர்களில் ஒருவரான அஸ்மா பின்த் ஹுமைஸ்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் மனைவியார் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை சந்திப்பதற்காக சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் தமது புதல்வி ஹஃப்ஸா[ரலி] அவர்களை காண அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா[ரலி] அவர்களுக்கு அருகில் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் இருந்தார்கள். உமர்[ரலி] அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களை கண்டபோது இவர் யார்.? என்று [தம் மகளிடம்] கேட்டார்கள். இவர் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] என்று மறுமொழி பகர்ந்தார்கள் ஹஃப்ஸா[ரலி]. இவர் அபிசீனியரா..? கடல் மார்க்கமாக [மதீனா] வந்தவரா என்று உமர்[ரலி] கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் கூறினார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள்,

உங்களுக்கு முன்பே நாங்கள் [மதீனாவிற்கு] ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக்கேட்டு அஸ்மா[ரலி] அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவர்களுக்கு அவர்கள் உணவளித்தார்க்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். நாங்களோ வெகு தொலைவில் இருக்கும் பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காவும், அவனது தூதருக்காகவுமே இதைச்செய்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் தெரிவிக்கும்வரை நான் எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம் , அச்சுறுத்தப்பட்டோம். இதை நான் இறைத்தூதரிடம் கூறுவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் சொல்லவும் மாட்டேன். திரித்துக் கூறவும் மாட்டேன். நீங்கள் கூறியதை விட எதையும் கூட்டிச்சொல்லவும் மாட்டேன் என்றார்கள்.

பின்பு நபி[ஸல்] அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் 'உமர் [ரலி] இன்னின்னவாறு கூறினார்கள்' என்றார்கள். அதற்கு நபி[ஸல்] அவர்கள், அவருக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்..? என்று கேட்டபோது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா[ரலி] கூறினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள், உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர்; அவருக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரே ஒரு ஹிஜ்ரத் [செய்தசிறப்பு] தான் உண்டு. [அபிசீனியாவிலிருந்து] கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு இரண்டு [அபிசீனியா-மதீனா] ஹிஜ்ரத் [செய்த சிறப்பு] உண்டு என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 4230

அன்பானவர்களே! நாம் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புகார் அளிக்க செல்வோமாயானால், நாம் யார் மீது புகாரளிப்போமோ அவர்மீது அவர் சொன்னவை மட்டுமன்றி, சொல்லாதவைகளையும் இட்டுக்கட்டி நமது கருத்தை நிலைநாட்டிட, நமக்கு சாதகமான கருத்தை தீர்ப்பாக பெற்றிடவே முனைவது நம்மில் பலரது இயல்பாகவே உள்ளது. இயக்கங்கள் பிரிவுக்குப்பின் பின் ஒருவரை ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் இந்த பொன்மொழியிலோ, இறைத்தூதர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் வந்தபின்னால் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் தாமே முதலானவர் என்பதை வைத்து, நாங்கள்தான் இறைத்தூதருக்கு உவப்பானவர்கள் என்று எதேச்சையாக உமர்[ரலி] அவர்கள் கூறியதைக் கண்டு சீரும்வேங்கையாக பொங்கி எழுந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி]அவர்கள், உமர்[ரலி] அவர்கள் குறித்து இறைத்தூதரிடம் புகாரளிக்க செல்லும் போது சொன்ன வார்த்தை, பொய்யுரைக்கமாட்டேன்; திரித்துக் கூறமாட்டேன்; நீங்கள் சொன்னதை விட கூடுதலாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டேன் என்றார்களே! இது சஹாபாக்கள் தியாகிகளாக மட்டுமல்ல; வாய்மையாளர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு கூறும் சான்றாகும். தனக்கு ஒருவனை பிடிக்கவில்லைஎன்றால் அவனை எங்ஙனமேனும் மண்ணை கவ்வவைக்க சபதமேற்று அவனைப்பற்றி 'கையில் மடியில்' போட்டு சொல்லும் கெட்ட குணத்தை கொண்டவர்களுக்கு இந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களின் வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.

சனி, 14 ஆகஸ்ட், 2010

பாவத்தைக் கண்டு பதறி பரிகாரம் கண்டவர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அபூஹுரைரா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நாங்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அமர்ந்திருந்த போது, ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, இறைத்தூதர்[ஸல்] அவர்களே நான் அழிந்துவிட்டேன் என்றார். அப்போது நபி[ஸல்] அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது..? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக்கொண்டு என்மனைவியிடம் கூடிவிட்டேன் என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள், விடுதலை செய்வதற்கு ஒரு அடிமை உம்மிடம் இருக்கிறாரா..? என்று கேட்டார்கள் . அதற்கு அவர், இல்லை என்று சொன்னார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு வைக்க உமக்கு சக்தி இருக்கிறதா..? என்று நபி[ஸல்] அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா..? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்று சொன்னார். நபி[ஸல்] அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது நபி[ஸல்] அவர்கள், கேள்வி கேட்டவர் எங்கே என்று கேட்டார்கள். நானே என்று அவர் கூறினார். இதைப்பெற்று தர்மம் செய்வீராக! என்று இறைத்தூதர்ஸல்] அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், இறைத்தூதர்[ஸல்] அவர்களே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா[நான் தர்மம் செய்யவேண்டும்]..? மதீனாவின் [கருங்கற்கள் நிறைந்த] இரு மலைகளுக்கும் மத்தியில் என் குடும்பத்தை விட பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார். அப்போது நபி[ஸல்] அவர்கள் தங்களின் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள்; பிறகு இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
நூல்;புஹாரி எண்; 1936

அன்பானவர்களே! பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த பாவத்தை எண்ணி வருந்துவது ஒரு இறை நம்பிக்கையாளனின் பண்பு. ஒரு இறை நிராகரிப்பாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது அமரும் கொசுக்கு நிகராக கருதுவான்; ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன் தான் செய்யும் பாவத்தை தன் மீது ஒரு மலை சாய்வதைப் போல கடுமையாக கருதுவான். அதனால்தான், ஆதமின் மகன் பாவம் செய்யக்கூடியவனே; அவர்களில் சிறந்தவன் தவ்பா எனும் பாவமன்னிப்பு கோருபவன் என்ற நபிமொழிக்கேற்ப, இந்த ஸஹாபி உணர்ச்சி மேலிட ஒரு பாவம் செய்கிறார். அதுவும் அந்நியப் பெண்ணிடம் அந்த தவறை செய்யவில்லை. அவருக்கு ஹலாலான மனைவியிடமே செய்கிறார். ஆனாலும் ரமளானில் பகலில் நோன்பு நோற்ற நிலையில் செய்ததால்தான் பாவமாகியது. அந்த பாவம் அவரும்- அவருடைய மனைவியும் தவிர வேறு எவரும் அறியாத நிலையிலும் கூட தான் செய்த பாவத்தால் கைசேதப்பட்டு தான் 'நாசமாகி' விட்டதாக புலம்பிக்கொண்டு நபியவர்களிடம் ஓடோடி வருகிறார். நபியவர்களிடம் பரிகாரம் காண்கிறார். இதுதான் ஒரு இறை நம்பிக்கையாளின் பண்பாகும். சஹாபாக்கள் பாவம் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
என்று அவர்களை குற்றவாளிகளாக காட்ட இந்த ஹதீஸை சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த ஹதீஸில் அவர்கள் பாவத்தை செய்து விட்டு துடித்த அந்த துடிப்பை; செய்த பரிகாரத்தை மறைத்து அல்லது மறந்து விடுவார்கள். எனவே சஹாபாக்கள் இயன்றவரை பாவம் தவிர்த்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மனிதன் என்ற முறையில் தப்பித்தவறி செய்த பாவத்திற்காகவும் வருந்தி தவ்பா செய்துள்ளார்கள். பரிகாரம் கண்டுள்ளார்கள். எனவே பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்தை நஞ்சென வெறுக்கவேண்டும். செய்த பாவத்திற்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கவேண்டும். அதன் மூலமே நாம் நஷ்டத்திலிருந்து விடுபடமுடியும் என்பதற்கு இந்த நபித் தோழரின் வாழ்வு மிகச்சிறந்த படிப்பினையாக நமக்கு உள்ளது.

அல்லாஹ், அந்த நபித் தோழரை பொருந்திக்கொள்வானாக! நம்மை பாவத்திலிருந்தும் காப்பானாக!!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உம்மஹாத்துல் முஃமினீன்களின் தியாகம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

[ஒருமுறை] அபூபக்கர் அஸ்ஸித்தீக்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டிற்கு வந்து உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்களில் பலர் தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருப்பதை கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்கர்[ரலி] உள்ளே சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் வந்து உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் அனுமதி கிடைத்தது.[அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்] அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது மனைவியர் சூழ, பேசமுடியாத அளவிற்கு துக்கம் மேலிட அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்கர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களை சிரிக்கவைக்க எதையேனும் சொல்லப் போகிறேன் என்று[மனதிற்குள்] சொல்லிக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களே! எனது மனைவி [ஹபீபா]பின்த் காரிஜா என்னிடத்தில் குடும்பச்செலவுத் தொகையை [உயர்த்தித்தருமாறு] கேட்க, நான் அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்..? என்று கேட்டார்கள். இதைக்கேட்டு அல்லாஹ்வின்தூதர்[ஸல்] அவர்கள் சிரித்தார்கள். பிறகு, இதோ நீங்கள் கானுகிண்றீர்களே! இவர்களும் என்னிடம் செலவுத்தொகையை [உயர்த்தித்தரக்]கோரியே என்னைச்சுற்றி குழுமியுள்ளனர் என்று கூறினார்கள். உடனே அபூபக்கர்[ரலி] அவர்கள் [தம் புதல்வி] ஆயிஷா[ரலி] அவர்களை நோக்கி, அவர்களை கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். உமர்[ரலி] அவர்கள், [தம் புதல்வி] ஹப்ஸா[ரலி] அவர்களை நோக்கி, கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர்களா என்று அவ்விருவருமே கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் இல்லாததை ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம் என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தி ஒன்பது நாட்கள் தம் மனைவியரை விட்டு விலகியிருந்தார்கள். அப்போது,

நபியே! உம்முடைய மனைவிகளிடம், ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகியமுறையில் விடுதலை செய்கிறேன். ஆனால் நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமைவீட்டையும் விரும்புவீர்களானால், அப்போது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் நிச்சயமாக மகத்தான நற்கூலியை சித்தம் செய்து வைத்துள்ளான் என்று கூறுவீராக. [33; 28,29 ]
என்ற வசனங்கள் அவர்களுக்கு அருளப்பட்டன.

இதையடுத்து ஆரம்பமாக ஆயிஷா[ரலி] அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சென்று, ஆயிஷாவே! உன்னிடம் ஒரு செய்தியை சொல்லப்போகிறேன். அது தொடர்பாக உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காதவரை அவசரப்பட்டு[எந்த முடிவுக்கும் வந்துவிடக்]கூடாது என விரும்புகிறேன் என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா[ரலி] அவர்கள், அது என்ன அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்றார்கள். அப்போது நபியவர்கள் மேற்கண்ட வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது ஆயிஷா[ரலி] அவர்கள், உங்கள் [உறவை துண்டிக்கும்] விஷயத்திலா என் பெற்றோரின் ஆலோசனையை நான் கேட்கவேண்டும்..? இல்லை! நான் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமையும் நான் தேர்ந்தெடுக்கிறேன் என்றார்கள்.
[நூல்;முஸ்லிம் 2946 ]

அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் முடிவைப் போன்றே நபி[ஸல்] அவர்களின் ஏனைய மனைவியரும் அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும், மறுமை வாழ்வையும் தேர்ந்தெடுத்தார்கள் என்று முஸ்லிமின் 2939 மற்றும் சில அறிவிப்புகளில் உள்ளது]

அன்பானவர்களே! இந்த பொன்மொழி நம்முடைய உள்ளத்தையும் கண்களையும் ஒருசேர நெகிழச்செய்வதாக உள்ளது. வெறும் பேரீச்சம் பழத்தையும், தண்ணீரையும் பெரும்பாலான நேரங்களில் உண்டு வாழ்ந்த அன்னையர்கள், சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே தங்களின் வீடுகளில் இருந்ததாக கூறும் அன்னையர்களின் செய்திகளை படிக்கும்போதெல்லாம் எவ்வாறு இவர்களால் இப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழமுடிந்தது.?என்று எமக்குள் ஒரு கேள்வி அலை வந்துபோகும். இந்த பொன்மொழியை படித்தபின்புதான் ஆம்! அவர்கள் வறுமை வாழ்வையும் பொருந்திக்கொண்டு கருணை நபியோடு வாழ்ந்ததற்கு காரணம் மறுமைவாழ்வு மீது கொண்ட தேட்டமே என்பதை உணரமுடிந்தது. அன்று அன்னையர்கள் இம்மை சுக போகத்தை பெரிதாக கருதாமல், அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மகத்தானமறுமை வீட்டையும் தேர்ந்தெடுத்ததால்தான் உலகம் அழியும் காலம் வரை தோன்றக்கூடிய நம்பிக்கையாளர்களுக்கு தாய்மார்கள் எனும் மகத்தான சிறப்பை அல்லாஹ்விடம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்றைய நவீன யுவதிகளில் பெருபாலோர் , தனது கணவன் பெரும்பான்மையான தேவைகளை நிறைவேற்றிஇருந்தாலும் , சில வேளைகளில் ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போகும் பட்சத்தில், 'உனக்கு வாழ்க்கைப்பட்டு என்னத்தை கண்டேன்..? என்று கணவனை எடுத்தெறிந்து பேசுவதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு அன்னையர்களின் தியாக வாழ்க்கை மிகப்பெரும் பாடமாகும்.
அதோடு, தமது மகளுக்கும்- மருமகனுக்கும் பிரச்சினை என்றால், பிரச்சினை குறித்து தீர ஆராயாமல் மகளுக்கே 'சப்போர்ட்' செய்யும் பெற்றோர்களைத்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த பொன்மொழியில், அபூபக்கர்[ரலி] உமர்[ரலி] என்ற இரு மாமனார்கள், தம் மகள்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும்கூட, அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனம் துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்முடைய மகள்களை அடிக்க முற்படுகிறார்கள் என்றால், இங்கே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சியாக எண்ணி இந்த இரு நல்லறத்தோழர்களும் வாழ்ந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்கர்[ரலி], உமர்[ரலி] ஆகியோரையும், உம்மஹாத்துல் முஃமீன்களான நம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் பொருந்திக்கொள்வானாக!