செவ்வாய், 17 நவம்பர், 2009

வானவரும் மேகமென வருவர்; இவர் வான்மறை ஓதும் அழகை காண!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்கள்;
நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை. காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் அவனை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5018

மற்றொரு அறிவிப்பில்....
ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் - ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) 'அல் கஹ்ஃப்' (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து)விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்னபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீங்கள்]. ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3614

இந்த பொன்மொழி, உசைத் இப்னு ஹுளைர்[ரலி] அவர்களுக்கு திருக்குர்ஆனோடு இருந்த தொடர்பும், குர்ஆணை அழகிய முறையில் ஓதும் அவரது அந்த அழகிய நற்செயலை முன்னிட்டு அல்லாஹ்வின் வானவர்கள் மேகமாக இறங்குகிறார்கள் [அல்லது] அமைதி எனும் மேகம் அவரை சூழ முகாமிட்டதையும் அறியமுடிகிறது. இந்த ஹதீஸின் மூலம் நாம் அருள்மறை குர்ஆனை அழகுற ஓதும்போது அதற்கு எழுத்துக்கு பத்து நன்மை என்ற விஷயம் ஒரு புறமிருக்க, அல்லாஹ்வின் அமைதி நம் மீது இறங்கும். ஆனால் நாமோ குர்ஆனை ஒரு குறிப்பிட்ட நாளில் ஓதக்கூடியதாக ஒதுக்கி விட்டோமே! மேலும் குர்ஆன் ஓதும் பலர் அதை அழகுற ஓதாமல் அலங்கோலமாக ஓதுவதை பார்க்கலாம். குறிப்பாக ரமலான் தராவீ ஹ் தொழுகையில் ஒரு மாதத்தில் முழு குர்ஆனை முடிக்கவேண்டும் என்று இவர்களாகவே முடிவு செய்து மின்னலை விட வேகமாக, பிழையாக ஓதினால் கூட சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு வேகமாக ஓதுவதை பார்க்கிறோம். இது குர்ஆனோடு விளையாடும் போக்காகும். எனவே குர்ஆனை ஓதும்போது ஒவ்வொரு வசனமாக அழகிய நயத்துடன் அதன் அர்த்தம் புரிந்து ஓதவேண்டும். அப்படி ஓதியதால்தான் உசைத் இப்னு ஹுளைர்[ரலி] அவர்கள் மீது அல்லாஹ்வின் அமைதி எனும் மேகம் தவழ்ந்தது. எனவே நாமும் உசைத்[ரலி] அவர்களை போல் வான்மறை ஓதுவோம். வல்லோனின் அமைதியை பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக