சனி, 17 அக்டோபர், 2009

அன்சாரிகளுக்கோ இன நோய்; அலீ' அவர்களுக்கோ பரம்பரை நோய்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ரஸூல்[ஸல்] அவர்கள் மரணம் உறுதிசெய்யப்பட்டவுடன், அடுத்த ஆட்சியாளர் யார் என்ற ஆலோசனை பற்றிய அந்த ஹதீஸை இப்படி வர்ணிக்கிறார் அந்த அதிமேதாவி;

இப்ப என்ன நோய் புடிக்குதுன்னு கேட்டா, ரஸூல்[ஸல்] உயிரோடு இருக்கும் வரை]தொற்றாத நோய் அந்த இன உணர்வு அன்சாரிகளிடத்தில் தலை தூக்கியது. அவர்கள் ஸஅத் இப்னு உபாதா என்ற சகாபியின் இடத்தில் ஒன்று கூடி, இந்த இடத்த மதீனா ஆட்கள் புடிக்கணும். ஒவ்வொருத்தருக்கும் ஓடுகிறது; ஆஹா! இப்ப எடம் காலி. சொல்வாங்கல்ல.. 'அண்ணா எப்ப காலியாவான்; திண்ணை எப்ப காலியாகும்' ன்னு சொல்வாங்கல்ல. அந்தமாதிரி காத்துக்கிட்டு இருந்தமாதிரி, இந்த முஹாஜிர்களை விடக்கூடாது; போன போகுதுன்னு சாப்பாடு குடுத்தோம், போன போகுதுன்னு தங்குகிறதுக்கு இடத்த குடுத்தோம். இப்ப ஆட்சியையும் புடிக்க பாக்குறாய்ங்க.. விடக்கூடாது என்று ஆலோசனை செய்தார்கள்...என்று அவரது வர்ணனை செல்கிறது. இதை செவிமடுக்கும்போது அன்சாரிகள் இன உணர்வோடு, பதவி வேட்கையோடு காத்துக்கிடந்தார்கள் என்ற தோற்றத்தை இந்த வர்ணனை ஏற்படுத்துவதை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் விளங்கலாம். ஆனால் இந்த சம்பவத்திற்கு ஆதாரமாக அவர் மேற்கோள் காட்டியியிருக்கும் ஹதீஸை நீங்கள் படித்தால், அன்சாரிகள் ஆலோசனை செய்ததும், தாங்கள் தரப்பில் அமீர் நியமிக்கப்படவேண்டும் என்ற அந்த நியாயமான ஆசை நீங்கலாக, இவராக விட்டு அடித்த எந்த 'பிட்டும்' அதில் இல்லை என்பதை பார்க்கலாம். அந்த ஹதீஸ் இதோ;

உமர்[ரலி] அவர்கள் கூறியது;

அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பன}சாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள்a நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்' என்று கூறிவிட்டு நடந்தோம். பன}சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம். அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்' என்று கூறினார். (உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும்v (மக்க ) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத்t தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராகஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார். அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்' என்றார். உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)' என்று கூறினேன்.மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

நூல்;புஹாரி எண் 6830
அன்பானவர்களே! மேற்கண்ட செய்தியில் அன்சாரிகள் குறித்து செய்த வர்ணனை பற்றி ஒரு வார்த்தையாவது உள்ளதா..? இதிலிருந்து சகாபாக்கள் விசயத்தில் எந்த அளவு பொடுபோக்கான வார்த்தைகள் கையாளப்பட்டு அவர்களின் கண்ணியம் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். மேலும் அதே வர்ணனையில், சுழற்சி முறையில் அமீரை தேர்ந்தெடுப்போம். அதாவது ஒரு வருஷம் அன்சாரிகள்; மறுவருஷம் முஹாஜிர்கள் என்று அன்சாரிகளில் சிலர் ஆலோசனை சொன்னார்கள். அதாவது காஷ்மீர்ல உள்ளது மாதிரி; உ.பி. உள்ளது மாதிரி... என்றும் அந்த அதிமேதாவி கூறுகிறார். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் சுழற்சி முறை அமீர் பற்றி அன்சாரிகள் சொன்னதாக ஏதாவது வார்த்தை உள்ளதா? சிந்திக்க வேண்டுகிறோம். தமது சொந்த மண்ணில் தமது ஊரை சேர்ந்த ஒருவர் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் இயல்பான ஆசை. அப்படிப்பட்ட ஆசைதான் அன்சாரிகளுக்கும் ஆரம்பத்தில் வந்தது. ஆனாலும், உமர்[ரலி] அவர்கள் அபூபக்கர்[ரலி] கரம் பற்றி பைஅத் செய்தவுடனே, அதன் தொடர்ச்சியாக அன்சாரிகளும் பைஅத் செய்து அபூபக்கர்[ரலி] அவர்களை அமீராக ஏற்றுக்கொண்டார்களே! அதுமட்டுமன்றி, உமர்[ரலி] அவர்களை அடுத்த ஜனாதிபதியாக அபூபக்கர்[ரலி] அவர்கள் அடையாளம் காட்டி வஸ்ஸியத் செய்தபோது, இந்த அன்சாரிகள் மறுத்து மதீனாவை நாங்கள்தான் ஆள்வோம் என்று அடம்பிடித்தார்களா? இல்லையே! மறு வார்த்தை பேசாமல் உமர்[ரலி] அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லையா? அடுத்து உஸ்மான்[ரலி] என்ற முஹாஜிரையும், அலீ[ரலி] என்ற முஹாஜிரையும் ஏற்றுக்கொள்ள வில்லையா? இதெல்லாம் சிந்தித்து விஷயத்தை அணுகாமல், எடுத்தேன்-கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் அன்சாரிகளை கவிழ்த்தவர், அடுத்து அலீ[ரலி] அவர்கள் விஷயத்திலும் பல்வேறு 'பில்ட்அப்கள்' எழுப்பியுள்ளார்.அந்த வர்ணனை இதோ;

அபூபக்கர்[ரலி] அமீரானபோது, அலீ[ரலி] அவர்களும், ஜூபைர்[ரலி] அவர்களும் பைஅத் செய்யவில்லை. ஜூபைர்[ரலி] பைஅத் செய்யாததற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் அலீ ஏன் பைஅத் செய்யலைன்னு பிற்காலத்துல அபூபக்கரிடம் அவரே சொல்றார்; நாங்க ரசூளுல்லாவோட மருமகன். அதுநாள் எங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கும்னு நெனச்சேன். அதுனால ஒங்களுக்கு பைஅத் பண்ணல. அடுத்த ஜனாதிபதி நான்தான் வரணும், நீங்க எப்பிடி வரலாம்..? ரசூளுல்லாவுக்கு அடுத்து ரசூளுல்லாவுடைய புள்ளைகளுக்கு தான அதிகாரம் வரணும்? ஆம்பள புள்ள இல்லையில.. பெண் வாருசுதான் இருக்குறோம். பெண் வாரிசுனா மருமகனுக்குத்தான வரணும். அப்ப நபிகள் நாயகம் விட்டுட்டுப்போன சொத்து இது[ஆட்சி அதிகாரம்]. இந்த அட்சி அதிகாரத்திலே எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நான் நினைத்தேன். ரசூளுல்லாவுக்கு அடுத்து ஆட்சிக்கு நான்தான் வரணும். இதுவந்து என்னுடய உள்ளத்தில் பதிந்துவிட்டது.அப்பிடி நான் வரணும்கிற இடத்துல நீங்க வந்தீங்கன்னா..? ஒங்க பாரம்பரியத்தை விட என் பாரம்பரியம் ஒசந்ததுல.. நாங்க ரசூளுல்லாவுடைய பாரம்பரியத்துல உள்ள ஆளுக. அப்துல் முத்தலிபோடவகையறா, நாங்கவந்து பனூஹாசிம் கோத்திரத்hசேர்ந்தவங்க.. நீங்க [அபூபக்கர்]என்னதான் ஒங்களுக்கு சிறப்பு இருந்தாலும் நீங்க ரசூலோட வாரிசா நீங்க..? என்று பேசுகிறார்.. மதீனா வாசிகளுக்கு உள்ளூர்வாசிகள் என்ற நோய்னா அலீ[ரலி] அவர்களுக்கு பாரம்பரியம் என்ற நோய்! என்று இப்படியாக வர்ணித்துவிட்டு அதற்கு சான்றாக அவர் சொன்ன ஹதீஸ் கீழே தந்துள்ளோம்;

அப்போது அலீ(ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கம் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கம் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்'' என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூ பக்ர்(ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல்விட்டு விடவுமில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும'' என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ(ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ(ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ(ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர்(ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர்(ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல் மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர்(ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது'' என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்'' என்று கூறினர். தம் போக்கை அலீ(ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டனர்.
நூல்;புஹாரி எண் 4240-4242

அன்பானவர்களே! அபூபக்கர்[ரலி] ஆட்சித்தலைவர் ஆனபோது, அலீ[ரலி] அவர்கள் பைஅத் செய்யாததற்கு காரணம் என்ன என்று அலீ[ரலி] அவர்கள் கூறும்போது, அபூபக்கர் [ரலி ] அவர்கள் நபி[ஸல்] அவர்கள் குடுப்பத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும்போது நடந்து கொண்டார்கள். நபி[ஸல்] அவர்களின் குடும்பத்தாராகிய எங்களுக்கும் ஆட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பங்கு உண்டு என்று மட்டுமே கூறியதை, அலீ பாரம்பரியம் பேசினார் நான் அந்த வகையறா..? இந்த வகையறா? நான் ரசூலோட மருமகன் நான்தான் ஆட்சிக்கு வரணும், நீங்க எப்பிடி வரலாம் என்றெல்லாம் அலீ[ரலி] அவர்கள் கூறியதாக 'அள்ளிவிட்ட' வார்த்தைகள் மேற்கண்ட ஹதீஸில் இருக்கிறதா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். சஹாபாக்களை நாங்கள் திட்டவில்லை; எங்கள் மீது அவதூறு சொல்லுகிறீர்கள் என்று அலறுபவர்கள், அன்சாரித்தோழர்கள் மீதும், அலீ[ரலி] அவர்கள் மீதும் அள்ளிவிட்ட அவதூறுகள் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக