வியாழன், 12 நவம்பர், 2009

ஷைத்தான் வெருண்டோடுவான் இவரைக்கண்டால்..!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்கள்;

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர்(ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர்(ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக ) இருக்கச் செய்வானாக" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே" என்றார்கள். உமர்(ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!" என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்காக நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்" என்று கூறினார்கள்.ஆதாரம்;புஹாரி எண் 3294!

இந்த பொன்மொழியில் நாம் கவனிக்கவேண்டிய படிப்பினை பல இருக்கின்றன. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் தமது வாழ்வாதார தேவைகள் குறித்து பேசிக்கொண்டிருந்த நமது அன்னையர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தமது கணவர் என்பதால் சாதாரண உடையோடு சகஜமாக பேசிய நிலையில் உமர்[ரலி] அவர்கள் வருவதையறிந்தவுடன் உடனடியாக தத்தமது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். உமர்[ரலி] அவர்கள் சிறந்த ஸஹாபி எனினும், அவர் ஒரு அந்நிய ஆண் என்பதால் உடனடியாக தமது ஆடை விசயத்தில் நமது அன்னையர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அதோடு உமர்[ரலி] அவர்கள் விஷயத்தில் நம் அன்னையர்கள் அஞ்சியதற்கு மற்றொரு காரணமும் உண்டு. பர்தா கடமையாக்கப்படுவதற்கு முன்பே உமர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம்,

'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!' என்று கூற, அல்லாஹ் உமர்[ரலி]அவர்கள் கூற்றிற்கேற்ப பர்தா தொர்பான வசனத்தை இறக்கி அருளினான்[புஹாரி] ஆக உமர்[ரலி] அவர்கள் பர்தாவை முன் மொழிந்தவர் என்பதால் அவர் வருகிறார் என்றவுடன் அன்னையர்கள் அவசரமாக பர்தாவை பேணுகிறார்கள்.

இதில் இன்றைய பெண்களுக்கு பல படிப்பினை உள்ளது தனது கணவரோடு இருக்கும் நிலையில் எந்த ஆடையோடு இருக்கிறார்களோ, அதே ஆடையோடு கணவனின் சகோதரனோ அல்லது வேறு நெருங்கிய உறவினர்களோ வந்தாலும் அப்படியே சர்வ சாதாரணமாக, சகஜமாக அதே உடையோடு நம் பெண்களில் பலர் இருப்பதை காணலாம். உறவினர் அல்லாத வேறு யாரேனும் வந்தால்தான் பர்தா முறையை பேணும் பெண்களும் உண்டு. இப்படிப்பட்ட பெண்கள், நம் அன்னையர்களிடம் படிப்பினை பெறவேண்டும்.

அடுத்து உமர்[ரலி] அவர்களின் உயர்வான சிறப்பும் இந்த பொன்மொழியில் விளங்குகிறது. அதாவது அவர்கள் ஒரு தெருவில் வந்தால், ஷைத்தான் அவர்களை கண்டு தனது பாதையை அடுத்த தெருவிற்கு மாற்றி விடுவான் என்று நபி[ஸல்] அவர்கள் கூறுவதன் மூலம் ஷைத்தான் அஞ்சக்கூடிய ஒரு சிறந்த இறை நேசராக உமர்[ரலி] அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். இன்று நம்முடைய நிலை என்ன..? நாம் ஒரு தெருவில் நடந்தால், ஷைத்தான் நம்மை எதிர்கொண்டு ஆரத்தழுவி வரவேற்று நம் தோள்மீது கை போட்டு அளவளாவும் அளவுக்கு மது-மாது-சூது-வட்டி-சினிமா-வரதட்சனை- போன்ற ஷைத்தானின் அடிச்சுவட்டில் பயணிப்பதன் மூலமும் இறைவனின் அருள் வாசலுக்கு நெருக்கமான அமல்களை செய்வதில் பாராமுகமாக இருப்பதன் மூலமும் ஷைத்தானின் உற்ற தோழர்களாக நாம் திகழ்கிறோம். இந்த நிலை மாறவேண்டும் எனில், உமர்[ரலி] அவர்களை போல் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை நம்மிடத்தில் வரவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இறைமறையோடும் -இறைத்தூதரின் பொன்மொழியோடும் தோழமை கொள்ளக்கூடியவர்களாக, ஷைத்தானிடம் பகைமை பாராட்ட கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

3 கருத்துகள்:

  1. Your articles are all good. But why do you give link for videos of Jamali. He promotes darga worship.

    பதிலளிநீக்கு
  2. assalamu alaikum.
    your articles are very much new to me and i want to learn more from you about isalm [inshaa allah]and a small request please send me the truth of the 9/11 american Attack is it made by osama

    பதிலளிநீக்கு
  3. மாஷா அல்லாஹ் !

    தங்களின் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது !

    shakul hameed - pudukkottai

    பதிலளிநீக்கு