திங்கள், 16 நவம்பர், 2009

இறைவனால் பெயர் கூறப்பட்டு சிறப்பிக்கப்பட்ட நல்லடியார்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ் தனது தூதர்களுக்கு பல்வேறுஅற்புதங்களை வழங்கினான். அந்த வரிசையில் நபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதம் திருமறை குர்ஆன் ஆகும். இந்த குர்ஆனை பெரும்பாலான சஹாபாக்கள் மனனம் செய்திருந்தாலும் அதில் நால்வரை குறிப்பிட்டு அவர்களிடமிருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று நபி[ஸல்] அவர்கள் கூறிய அந்த நால்வரில் உபை இப்னு கஅப்ரலி] அவர்களும் ஒருவர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள். [புஹாரி]

இந்த அளவுக்கு சிறப்பிற்குரிய நபித்தோழராக உபை இப்னு கஅப்[ரலி] திகழ்வதற்கு காரணம், குர்ஆனை மனனம் செய்ததோடு சிறப்பாக ஓதவும் கூடியவர்.

உமர்(ரலி) அறிவித்தார்கள்; எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். [ஹதீஸ் சுருக்கம் புஹாரி]

அல்லாஹ்வின் வேதத்தை மனதில் தாங்கி, அதை அழகிய முறையில் ஓதக்கூடிய உபை இப்னு கஅப்[ரலி] அவர்களின் பெயரை அல்லாஹ் சொல்லி சங்கைப்படுத்திய அதிசயம் பாரீர்;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்' என்று கூறினார்கள். அதற்கு உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரை குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை(ரலி) அழுதார்கள். [நூல்;புஹாரி]

அன்பானவர்களே! திருமறை குர்ஆனோடு உபை இப்னு கஅப் [ரலி] அவர்கள் கொண்ட நேசம் அவர்களின் பெயரை அல்லாஹ் சொல்லும் அளவுக்கு அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத்தந்துள்ளது என்றால், இன்று அந்த உபை இப்னு கஅப்[ரலி] ஓதிய அதே குர்ஆன் நம்மிடம் உள்ளது. அதை அழகிய முறையில் ஓதுபவர்கள் நம்மில் எத்துனை பேர்..? குர்ஆன் பட்டுத்துணியால் போர்த்தப்பட்டு பரணியில் வைக்கும் அழகு பொருளாகவும், பட்டுப்[இறந்து]போனவர்களின் பக்கத்தில் உக்கார்ந்து ஓதும் மந்திரப்பொருளாகவும் நம்மால் மாற்றப்பட்டுவிட்டதே! இந்த நிலை மாற இன்று முதல் இயன்றவரை இறைமறை ஓதுவோம். இறைவனின் அன்பை பெறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக