வெள்ளி, 13 நவம்பர், 2009

இறைத்தூதரிடம் அளித்தார் உறுதிமொழி; இறுதிவரை காட்டினார் அதில் உறுதி!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்கள்;நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்" என்று கூறினேன்.

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். பிறகு, உமர்(ரலி) அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றைக்) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர்(ரலி) (மக்களிடையே), 'முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்' என்று அறிவித்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), தாம் மரணிக்கும் வரை (எதுவும்) கேட்கவில்லை. அல்லாஹ் அவரின் மீது கருணை புரிவானாக!ஆதாரம்; புஹாரி எண் 2750

அன்பானவர்களே! பொதுவாக மனிதன் போதும் என்று சொல்லாத விஷயங்களில் முதலிடம் வகிப்பது செல்வமாகும். ஒருவனுக்கு எவ்வளவுதான் செல்வம் அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருந்தாலும், அதில் மனநிறைவு அடையாமல் இன்னும் ஏதாவது இலவசமாக கிடைக்காதா என்று எதிபார்த்து காத்திருப்பான். இதற்கு நிகழ் கால சம்பவம் ஒன்றை குறிப்பிடலாம் அரசு சார்பாக இலவச கலர் டிவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் என்பது அவசியமற்றது என்பது ஒருபுறமிருக்க, இந்த இலவச கலர் டிவியை வாங்குவதற்கு ஒரு பெண்மணி காரில் வந்து இறங்குகிறார். கார் வைத்து இருக்கும் அளவுக்கு வசதி படைத்தவர் , அரசு ஒரு பொருளை இலவசமாக வழங்குகிறது என்றால் அங்கே தனது கண்ணியத்தை மறந்து அந்த பொருளை அடையமுயற்சிக்கிறார் என்றால் மனிதனின் பொருளாசைக்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இப்போது நாம் ஹகீம் இப்னு ஹிஸாம்[ரலி] அவர்களை நினைத்து பார்க்கிறோம். அல்லாஹ்வின் தூதரிடம் சொன்ன வாக்கிற்காக, அபூபக்கர்[ரலி] அவர்களும், உமர்[ரலி] அவர்களும் தனக்கு வழங்க முன்வந்த, தனக்கு சேரவேண்டிய செல்வத்தை கூட வாங்க மறுத்து, எவரிடத்திலும் எதையும் வாங்குவதில்லை என்ற தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று மரணித்த அந்த மாமேதையை என்னும்போது,

ஆம்! இவர்கள் மறுமைக்காக இம்மையை விற்றவர்கள் என்ற உண்மை உறுதியாக வெளிப்படுகிறது. மேலும் அவர்களின் ஒப்பற்ற தியாக வாழ்வும் நம்மை மெய்சிலிர்க்க செய்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் , அவசியமற்ற செல்வத்திற்காக பேராசை கொண்டு அடுத்தவர்களிடம் கையேந்தும் இழி நிலையில் இருந்து நம்மை காப்பாற்றுவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக