வெள்ளி, 29 அக்டோபர், 2010

உயர்வான அல்லாஹ் நடத்திவைத்த, 'அன்னையின்' உன்னத திருமணம்'!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. இது சரியோ- தவறோ நாமறியோம். ஆனால் சொர்க்கத்தை உருவாக்கிய உயர்ந்தோனாகிய அல்லாஹ் நடத்தி வைத்த ஒரே திருமணம் என்ற பெருமை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களை மணந்த அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களின் திருமணத்திற்கே சேரும்.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தனது மாமி மகள் ஸைனப்[ரலி] அவர்களை தனது வளர்ப்பு மகனாக இருந்த ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி)[ரலி] அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவ்விருவருக்கும் பிணக்கு ஏற்படவே, பின்பு நடந்த சம்பவத்தை திருக்குர்ஆனில் அல்லாஹ் விளக்குகிறான்;
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَاجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا


(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். [33 ;37 ]

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வால் நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்து  ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள். [புகாரி 7240 ]

இறைத்தூதருக்கும் இத்திருமணத்தில் எல்லையில்லா ஆனந்தம்;

ஸாபித் அல்புனானீ(ரஹ்) அறிவித்தார்

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் திருமணம் குறித்து அனஸ்(ரலி) முன்னிலையில் பேசப்பட்டது. அப்போது அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களுக்காக (அன்னாரை மணந்து பின்) வலீமா - மணவிருந்தளித்த அளவு வேறு எவரை மணந்தபோதும் அவர்கள் மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை; நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களை மணந்ததற்காக) ஓர் ஆட்டை (அறுத்து) வலீமா விருந்தளித்தார்கள்.[புகாரி 5171 ]அல்லாஹ், ஸைனப் பின்த் ஜஹ்ஷ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக