வெள்ளி, 29 அக்டோபர், 2010

இறைத்தூதரின் மனைவியரில் ஆயிஷா[ரலி]க்கு தனிச்சிறப்பு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக்  காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய  அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு.

அண்ணையோடு இருக்கும் வேளையில்தான் அல்லாஹ்வின் வஹீ அருளப்படுதல்;

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்கள்;


மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, 'உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடுமபடி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டனர்.

(உம்மு ஸலமா(ரலி) கூறினார்கள்:)

நான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவர்களிடம்  இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், 'உம்மு ஸலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை" என்று பதிலளித்தார்கள்.
நூல்; புகாரி எண்; 3775

மேற்கண்ட பொன்மொழி, அன்னை ஆயிஷா[ரலி] நீங்கலாக, வேறு மனைவியரின் போர்வைக்குள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் [ஸல்]அவர்களுக்கு வஹீ அருளப்படவில்லை என்று கூறுவதின் மூலம் அன்னையின் சிறப்பை உணரலாம்.

அண்ணைக்கு அமரரின்[வானவர்] ஸலாம்;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், 'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்" என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' அவரின் மீதும் சலம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்" என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, 'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
 
நூல்;புகாரி எண்;  3768 
 
மலக்குகள் சுயமாக எதையும் செய்யக்கூடியவர்கள் அல்ல. அல்லாஹ்வின் கட்டளையை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எனவே அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படியே ஜிப்ரீல்[அலை]  அவர்கள் ஸலாம் சொல்லியுள்ளார்கள். எனவே இதிலும் அண்ணைக்கு தனிச்சிறப்பு இருப்பதை உணரலாம்.
 
'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் பெற்றவர்;
 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"


(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

நூல்;புகாரி எண்; 3770 

அன்னையின்  சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு. அவைகளை அவ்வப்போது அசைபோடுவோம். அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக