சனி, 12 செப்டம்பர், 2009

இறைவழியில் தன்மகனை இழந்த ஒருதாயின் பொறுமை!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;
ஹாரிஸா இப்னு சுராக்கா அல்அன்சாரி(ரலி) அவர்கள் பத்ருப் போரில் யாரோ எறிந்த அம்பு தாக்கி இறந்தார்கள். இந்நிலையில் அவரின் தாயார் இறைத்தூதர் அவர்களே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என் இதயத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவர் (இப்போது) சொர்க்கத்தில் இருந்தால் அவருக்காக நான் அழப்போவதில்லை. அவ்வாறில்லையேல், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்' என்று கூறினார். அப்போது அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இழப்பால் துடிக்கிறாயா? அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்களின் படித்தரங்)கள் நிறைய உள்ளன. உன் மகன் 'ஃபிர்தவ்ஸ்' எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார்' என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 6567

இந்த பொன்மொழியில், பத்ர் போரில் ஷஹீதான ஹாரிஸா[ரலி] அவர்களின் தாயார் அவர்கள், தன் மகன் போரில் கொல்லப்பட்டு விட்டாரே என்பதற்காக கவலைப்படவில்லை. மாறாக தன்மகனின் மறுமை நிலை குறித்து கவலை கொள்கிறார்கள். சுவனத்தில் மிக உயர்வான படித்தரமான 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில்' ஹாரிஸா[ரலி] இருக்கிறார்கள் என்பதை நபி[ஸல்] அவர்களின் திருவாயால் கேட்டபின்பே அவர்கள் அமைதியடைகிறார்கள். தன்மகனின் உயிரைவிட மகனின் மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் அளித்த ஹாரிஸா[ரலி] அவர்களின் அன்னையையும்-இன்றைய நம் தாய்மார்களையும் ஒப்பிட்டுப்பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளை காணலாம். பிள்ளையை கொடுத்த இறைவன் அந்த பிள்ளையின் உயிரை எடுத்துவிட்டால், அதுகுறித்து பொறுமை கொள்ளாமல் அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக்கொள்ளாமல் யா அல்லாஹ்! உனக்கு என் பிள்ளைதான் கண்ணுக்கு தெரிந்ததா..? என்று ஒப்பாரிவைத்து கூப்பாடு போடும் தாய்மார்களை நாம் பார்க்கிறோம். ஆனால் ஹாரிஸா[ரலி] அவர்களின் தாயார் அவர்கள் தான் மிகவும் நேசித்த மகனை பெரும்பாலும் மரணத்திற்கே சாத்தியமுள்ள போருக்கு அனுப்பிவைத்து, அந்த போரில் தன்மகன் கொள்ளப்பட்டபின்னும் அதுகுறித்து கவலைகொள்ளாமல் தன்மகனின் மறுமைநிலை குறித்தே கவலைகொன்டார்கள் எனில், அந்த தாயின் உள்ளத்தை அல்லாஹ் எந்த அளவுக்கு விசாலாமக்கியுள்ளான் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ளமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக