செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பிளேக் நோய் பரவியிருந்த சிரியாவுக்கு செல்ல தயாரானார்களா உமர்[ரலி]...?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
உமர்[ரலி] அவர்கள் சிரியாவை நோக்கி பயணமானார்கள். சஃர்க் எனும் இடத்தை அடைந்தபோது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் நோய் ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். என்ன செய்வது என்று உமர்[ரலி] அவர்கள், முஹாஜிர்களிடமும்-அன்சாரிகளிடமும் ஆலோசனை கேட்டபோது யாருக்கும் அதுபற்றிய விளக்கம் தெரியவில்லை.எனவே சிரியாவுக்கு செல்ல உமர்[ரலி] ஆயத்தமானார்கள். அப்போது வெளியூரிலிருந்து திரும்பி வந்த அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் உமர்[ரலி] அவர்களை சந்தித்து ப்ளேக் நோய் தொடர்பான நபிமொழியை சொன்னார்கள். உமர்[ரலி] அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மதீனா திரும்பினார்கள் என்ற புஹாரியின் 5729 ஹதீஸை அரைகுரைகுறையாக போட்டுவிட்டு,
  • சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
  • அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் இந்த நபிமொழியை எடுத்துக்காட்டி இருக்காவிட்டால் உமர்[ரலி] உள்ளிட்ட நபித்தோழர்கள் சிரியா சென்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

என்று தங்களின் சொந்த கருத்தை திணித்துள்ளார்கள். முதலில் அவர்கள் பதிவு செய்த ஹதீஸின் முழுமையை கீழே படியுங்கள்;

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்;

உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை' என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப்பிறகு, 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள். அப்போதும் உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர். எனவே, உமர்(ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க, உமர்(ரலி), 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?' என்று கேட்டார்கள். அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள். உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். [புஹாரி எண் 5729 ]

அன்பானவர்களே! நாம் 'ஹைலைட்' செய்துள்ளவைகளை கவனமாக படியுங்கள். சஃர்க் எனும் பகுதியில் உள்ள [அல்லது தன்னுடன் வந்த] முஹாஜிர் களிடமும்- அன்சாரிகளிடமும் மட்டுமன்றி, அப்பகுதியில் உள்ள மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷி பெரியவர்களிடமும் ஆலோசனை நடத்திய உமர்[ரலி] அவர்கள், மதீனா திரும்ப முடிவெடுத்து அறிவித்தபோது, அபூ உபைதா[ரலி] அவர்கள் உமர்[ரலி] அவர்களின் முடிவை ஆட்சேபித்து, அல்லாஹ்வின் விதியை கண்டா வேருண்டோடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து தெளிவாக தெரிகிறது உமர்[ரலி] அவர்கள் , அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்களை சந்திப்பதற்கு முன்பாகவே மதீனா செல்லும் முடிவை எடுத்துவிட்டார்கள் என்று! மேலும் தனது முடிவுக்கேற்ப நபிமொழியை செவிமடுத்தவுடன் ஆனந்தத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து மதீனா திரும்புகிறார்கள். ஆக, அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] அவர்கள் ஹதீஸை சொல்ல்லியிருக்காவிட்டால் உமர்[ரலி] அவர்கள் உள்ளிட்ட சகாபாக்கள் சிரியா சென்றிருப்பார்கள் என்று 'சகாபாக்களை மடம் தட்டும் நூலில் எழுதியது' தவறு என்பது தெளிவாகும். மேலும் இந்த பிளேக் நோய் பற்றிய ஆலோசனையை எதோ ஒட்டுமொத்த முஹாஜிர்களையும்- ஒட்டுமொத்த அன்சாரிகளையும் அழைத்துவைத்து உமர்[ரலி] ஆலோசனை செய்தது போலவும் அவர்களில் யாருக்குமே இந்த ஹதீஸ் தெரியவில்லை என்பது போலவும், அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] என்ற ஒரே ஒரு[?] சகாபிக்கு மட்டுமே இந்த ஹதீஸ் தெரிந்ததாகவும் வர்ணித்துள்ளார்கள். ஆனால் இதே கருத்துடைய ஹதீஸை வேறு சில சகாபிகளும் அறிவித்துள்ளார்கள்.
  • ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்; (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது.... (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்" என்று கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.ஆதாரம் புஹாரி எண் 3473 ]

இந்த ஹதீஸ் மூலம், ஆமிர் இப்னு ஸஅத்(ரலி),ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) ஆகியோர்க்கு தெரிந்துள்ளதை அறியமுடிகிறது.

  • நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்கள்; நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்" என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்" என்று கூறினார்கள். [ஆதாரம்;புஹாரி எண் 3474 ]

இந்த ஹதீஸ் மூலம் , அன்னை ஆயிஷா[ரலி] அவர்களும் அறிந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இதே பிளேக் நோய் பற்றி வேறு கருத்துகள் அடங்கிய ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஏராளமான ஹதீஸ்கள் உண்டு. எனவே உமர்[ரலி] அவர்கள் ஆலோசனை செய்த சஃர்க் எனும் இடத்தில் இருந்த நபித்தோழர்கள் இந்த ஹதீஸ் பற்றி அறியாமல் இருந்திருக்கலாம். அதை வைத்து அப்துர் ரஹ்மான்[இப்னு] அவூப்[ரலி] அவர்களைத்தவிர வேறு எந்த சகாபிக்கும் தெரியவில்லை என்பது அப்பட்டமான பிழையாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக