بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்" என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹு தஆலா, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே 'இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுததிக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!' எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.
ஆதாரம்;புஹாரிஎண் 1461
இந்த பொன்மொழியில், 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என்ற வசனம் இறங்கிய மாத்திரமே அபூதல்ஹா[ரலி] அவர்கள் தான் மிகவும் நேசிக்கும், நபி[ஸல்] அவர்கள் வாயாலேயே அதிகம் லாபம் தரக்கூடிய செல்வம் என்று சிலாகித்து சொல்லப்பட்ட தோட்டத்தை இறைவழியில் தானமாக வழங்குகிறார்கள் எனில், இம்மையின் செல்வத்தை இழந்தால்தான் மறுமையில் இறைவனின் நன்மையை பெறமுடியும் என்றால் அதற்காக செல்வத்தை இழப்போமே தவிர, மாறாக இறைவனின் நன்மையை இழந்துவிடமாட்டோம் என்று அபூதல்ஹா[ரலி] அவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்றை பார்க்கிறோம். ஆனால் இன்று இறைவனால் செல்வம் வழங்கப்பட்ட நம்மில் பலர் அந்த செல்வம் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு ஜக்காத் கொடுக்கக்கூட மனமில்லாமல் செல்வத்தை பதுக்குவதை பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்கள் அபூதல்ஹா[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக