வியாழன், 17 செப்டம்பர், 2009

தயம்மும் சலுகையை மறுத்தார்களா இப்னு மஸ்வூத்[ரலி]..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
நூல்; புஹாரி எண் 347

இந்த ஹதீஸை முன்வைத்து, அல்லாஹ்வும் அவனது தூதர்[ஸல்] அவர்களும் வழங்கிய சலுகையான தயம்மும் செய்வதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் மறுக்கிறார்கள். உரிய ஆதாரங்களை அபூமூஸா[ரலி] அவர்கள் முன்வைத்தபின்னும் தவறான காரணம் கூறி இப்னு மஸ்வூத் [ரலி] அவர்கள் தன் முடிவில் நீடிக்கிறார்கள். சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித்தோழரிடம் காணப்பட்டால் அது எத்தகைய விளைவை ஏற்ப்படுத்தும்..? இன்னும் இதுபோல் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? என்றெல்லாம் சகாபாக்களை மட்டம் தட்டும் ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். நன்றாக கவனிக்கவேண்டும். முதலாவதாக தயம்மும் சம்மந்தமான வசனத்தையோ, அதுதொடர்பான நபிமொழியையோ இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் மறுக்கவில்லை. இந்த சலுகை இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள்,
'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று பேணுதல் அடிப்படையில் தன் கருத்தை சொல்கிறார்கள். இவ்வாறு நபி[ஸல்] அவர்களால் சொல்லப்பட்ட சட்டத்திற்கு பேணுதல் அடிப்படையில் சகாபாக்கள் கருத்து சொல்லி அதை நபி[ஸல்] அவர்கள் அங்கீகரித்த சான்று உண்டு. இதோ;

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து,) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பி சான்று கூறுகின்ற எவரையும் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.நான் திரும்பி வந்தபோது உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இந்தக் காலணிகள் யாவை அபூஹுரைரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி இக்காலணிகளை (அடையாளமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன்.உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள் அபூஹுரைரா!" என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின் தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான் "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு ‘திரும்பி செல்லுங்கள்’ என்று கூறினார்" என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அந்த ஒன்றையே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்; அவர்கள் (நற்)செயல் புரிய விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டு விடுங்கள் (அவர்கள் நற்செயல்கள் செய்யட்டும்)" என்று சொன்னார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
ஆதாரம்;முஸ்லிம்எண் 46

இந்த பொன்மொழியை கவனமாக படியுங்கள்! நபி[ஸல்] அவர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அதை மக்கள் மத்தியில் வைக்கப்பட்டால், நாம்தான் ஏகத்துவத்தை உறுதியாக நம்பி அதற்குசாட்சி சொல்லக் கூடியவர்களாக இருக்கிறோமே! நமக்குத்தான் சொர்க்கம் உறுதி என்று நபி[ஸல்] அவர்களே சொல்லிவிட்டார்களே! என்ற மெத்தனத்தின் காரணமாக அமல் செய்வதில் மக்கள் பாராமுகமாக இருந்துவிடுவார்கள் என்று அஞ்சிய உமர்[ரலி] அவர்கள் தன் சொந்த கருத்தைத்தான் 'பேணுதல்' அடிப்படையில் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அதை நபி[ஸல்] அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்றால், நபித்தோழர்கள் சட்டத்தை மறுக்காமல் பேணுதல் அடிப்படையில் சொல்லும் கருத்துக்கு நபி[ஸல்] அவர்களின் அங்கீகாரம் உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு வாதத்திற்கு இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் சொன்னது இந்த விசயத்தில் தவறு என்று வைத்துக்கொண்டாலும், 'இன்னும் இது போன்று எத்தனை விசயத்தில் தவறான தீர்ப்பு வழங்கினார்களோ..? என்ற சந்தேகத்தை ஒரு நபித்தோழர் மீது ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்கள் கையாளப்பட்டிருப்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக