சனி, 19 செப்டம்பர், 2009

நபித்தோழர்கள் ஃபித்அத்தை உண்டாக்குவார்கள் என்று நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்களா..?

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி[ஸல்] அவர்களின் மறைவுக்கு பின்னால் நபித்தோழர்கள் சிலர் தவறான பாதைக்கு சென்றுவிடுவார்கள். அதற்காக தண்டிக்கப்படுவார்கள் என்று நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்திருப்பதாக கூறி சில ஹதீஸ்களை சகாபாக்களை மட்டம் தட்டும் நூலில் வெளியிட்டுள்ளார்கள்.

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்" என்று கூறிவிட்டு, பிறகு, 'எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்" என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், 'இவர்கள் என் தோழர்கள்" என்று கூறுவேன். 'இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்" என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, '(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்கானிப்பவனாகி விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்" (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 3349 ]

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான். என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் மட்டுமன்றி இதுபோன்ற கருத்தைத்தரும் பல ஹதீஸ்களின் நம்பரையும் போட்டுள்ளார்கள். இந்த இரு ஹதீஸ்களும்[ அவர்களின் கருத்துப்பிரகாரம்] நபி[ஸல்] அவர்களின் மறைவுக்கு பின்னால் சகாபாக்கள், புதியவைகளை உருவாக்கியதோடு மதம் மாறியதாகவும் அதாவது இஸ்லாத்தை விட்டு சென்றதாகவும் கூறுகிறது. இந்த ஹதீஸ்களில் சொல்லப்பட்டவர்கள் சகாபாக்கள் என்றால், மதம் மாறிய ஒரு சகாபியின் பெயரையாவது அவர்கள் வெளியிட வேண்டும். ஆனால் இந்த ஹதீஸில் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்தது சஹாபாக்களை அல்ல. மாறாக அபூபக்கர்[ரலி] ஆட்சிக் காலத்தில் மதம் மாறிய நயவஞ்சகர்களைத்தான் குறிக்கும் என்பதை புஹாரி 3447 வது ஹதீஸின் தொடரில் ,
தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூ பக்ர்(ரலி) அவர்களின் காலத்தில் மதமாறியவர்கள் தாம்! அபூ பக்ர்(ரலி) (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள். என்று கபீஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்கள் கூறிய கருத்தை இமாம் புஹாரி[ரஹ்] அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மேலும் 'கவ்ஸர்' அருகே தடுக்கப்படும் சிலரை பார்த்து அவர்கள் என் தோழர் களாயிற்றே! என்று நபி[ஸல்] அவர்கள் சொல்லியதால் இது கண்டிப்பாக சகாபாக்களையே குறிக்கும் என்று வாதிடுவார்களானால், கீழ்கண்ட ஹதீஸையும் பார்க்கட்டும்;
  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நான் ('அல்கவ்ஸர்') தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்' என்பேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்' என்று கூறப்படும். இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.[புஹாரி எண் 6593 ]

இந்த ஹதீஸில் கவ்ஸரில் தடுக்கப்படுபவர்களை பற்றி ,' என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்' என்று நபி[ஸல்] அவர்கள் கூறுகிறார்கள். கவ்ஸரில் தடுக்கப்படுபவர்கள் சகாபாக்கள்தான் என்றால், சகாபாக்கள் மட்டும்தான் நபி[ஸல்] அவர்களின் சமுதாயமா? நாமெல்லாம் ஏன் உலகம் அழியும் வரை தோன்றவிருக்கும் முஸ்லிம்கள் நபியவர்களின் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? என்பதையும் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக