வெள்ளி, 4 செப்டம்பர், 2009

கொடுத்த வாக்குறுதிக்காக தன்னை தியாகம் செய்தவர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்;

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.

"அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.

ஆதாரம்;புஹாரி எண் 2805

இந்த பொன்மொழியில், அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம், இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான் என்று கூறியதோடு அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உஹதில், இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று சூளுரைத்து களமிறங்கி அல்லாஹ்வின் பகைவர்களை வேட்டையாடி அதில் தானும் ஷகீதாகி இறைவனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதின் காரணமாக அல்லாஹ் இந்த நல்லறத்தோழரை கண்ணியப்படுத்தி வசனமே இறக்குகிறான் எனில், இவர்கள்தான் சொர்க்கத்திற்கு பகரமாக தங்களுடைய உயிரை விற்றவர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக