வியாழன், 13 ஆகஸ்ட், 2009

அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா[ரலி]

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்;
என்னை ஸ¤பைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னை தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக, 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸ¤பைர்(ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்.
நான் (என் கணவர்) ஸ¤பைரிடம் வந்து '(வழியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரிச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரிச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார்.

ஆதாரம்;புஹாரி எண் 5224

இந்த பொன்மொழியில், சுமார் இரண்டு மைல் தொலைவிலிருந்து தலையில் சுமையுடன் வரும் அஸ்மா[ரலி] அவர்களை தனது ஒட்டகையில் தன்னுடன் வருமாறு நபி[ஸல்] அவர்கள் அழைக்கிறார்கள். நபி[ஸல்] அவர்கள் யார்? அஸ்மா[ரலி] அவர்களின் தந்தை அபூபக்கர்[ரலி] அவர்களின் உற்ற தோழர் மேலும் அஸ்மா[ரலி] அவர்களின் கணவர் ஸுபைர்[ரலி] அவர்களின் தோழரும் கூட. அதுமட்டுமன்றி அஸ்மா[ரலி] அவர்களின் தங்கை அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் கணவர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடுகளவும் கெட்ட எண்ணம் இல்லா இறைத்தூதர். அப்படியிருந்தும் அஸ்மா[ரலி] அவர்கள் வெட்கப்பட்டு,தன் கணவர் ஸுபைர்[ரலி] அவர்களின் ரோசத்தையும் மனதில் கொண்டு நபி[ஸல்] அவர்களோடு பயணிப்பதை தவிர்த்துவிட்டார்கள் எனில், இதுதான் இறையச்சம் கலந்த கற்புநெறி.

இன்றைய நவநாகரீக மங்கையர்களில் பெரும்பாலோர், கணவனின் அண்ணனோடு அல்லது தம்பியோடு அல்லது உடன்பிறவா சகோதரர்களோடு மட்டுமன்றி கணவரின் நண்பர்களோடும் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதையும், மேற்கண்டவர்களோடு சில நேரங்களில் தனியாக பஸ்/ரயில் போன்றவற்றிலும் பயணிப்பதை பார்க்கிறோம். இவ்வாறான செயல்களையுடைய முஸ்லிம் பெண்களும்,

சென்னை போன்ற பெருநகரங்களில் 'ஷேர்ஆட்டோ' வில் அடுத்த ஆண்களோடு பயணிப்பது, நெருக்கடி மிகுந்த பஸ்களில் பயணிப்பது இவ்வாறான செயல்களையுடைய முஸ்லிம் பெண்களும்,

சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுக்கும் போராட்டங்களுக்கு சென்று, ரோட்டிலே நின்று கொண்டு,அங்கே ஆண்களுக்கு சமாமாக குரலை உயர்த்தி கோஷம் போடுவதோடு அந்நியர்களின் பார்வைக்கும் இலக்காகும் முஸ்லிம் பெண்களும்,

இந்த அஸ்மா[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும். அல்லாஹ், அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக