திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இறைவனால் உண்மைப் படுத்தப்பட்ட உயர்வாளர்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
 
ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
 
ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை' என்று அவர்கள் சாதித்தார்கள்.
 
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். அப்போது,
 
'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)' என்று கூறினார்கள். நூல்; புஹாரி எண்; 4900௦௦ 
 
திருக்குர்'ஆன் மூலம் உண்மைப் படுத்தப்பட்டவராக ஆன்னை ஆயிஷா[ரலி] அவர்களை அனைவரும் அறிந்து  வைத்துள்ளோம். அதே போல் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை'யின் பொய் சத்தியத்தால் பொய்ப்படுத்தப்பட்ட ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களை, அல்லாஹ் ஒரு வசனத்தையே  இறக்கி 'உண்மையாளர்' என்று தனது தூதருக்கும், அன்றைய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் உள்ளளவும் வாழும் மக்கள் அனைவருக்கும் உணர்த்துகின்றான் என்றால் இங்கே ஸைத் இப்னு அர்கம்[ரலி] அவர்களின் சிறப்பு பளிச்சிடுகிறது. மேலும் தான் சொன்ன உண்மை பொய்யாக்கப் பட்டதை அறிந்து அந்த  நபித்தோழர் அடைந்த  மன  வேதனை அவர்களின் நல்லொழுக்கத்தை பறை சாற்றுகிறது. நல்லவர்கள் மீது சுமத்தப்படும்  களங்கம் நீண்டநாள் நீடிப்பதில்லை. அதே போல் இன்றைக்கு சிலர் தங்களின் வாதத்திறமையால் சஹாபாக்களை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும் முறியடிக்க அல்லாஹ் போதுமானவன்.   

2 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி.
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக....

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    தங்களின் கருத்துரைக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கும் ரஹ்மத் செய்வானாக....

    பதிலளிநீக்கு