சனி, 16 அக்டோபர், 2010

இவர் சத்தியமிட்டார்; இறைவன் அதை நிறைவேற்றினான்!

بســــم الله الـر حـمـن الرحـــيــم


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;


என் தந்தையின் சகோதரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்" என்று கோரினார்கள்.

அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)" என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்" என்றார்கள்.
ஆதாரம்; புகாரி எண்; 2703

அன்பானவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யும் அனைத்தையும் நம்மில் பலர்  நிறைவேற்றுவதில்லை. ஆனால் இந்த நபித் தோழர் அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள் தனது சகோதரி விஷயத்தில், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் சகோதரிக்கு தண்டனை நிறைவேற்றப் படாது என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களின் சத்தியத்தை அங்கீகரித்து, ஏற்கனவே ஈட்டுத்தொகை பெறமாட்டோம் என்று சொன்னவர்களின் மனதை மாற்றி, ஈட்டுத்தொகை பெற வைப்பதன் மூலம், அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் சகோதரியை தண்டனையிலிருந்தும்  பாதுகாத்து, அதன் மூலம் தனது நல்லடியார் அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்களின் சத்தியத்தையும் உண்மைப் படுத்துகிறான் என்றால், அதை நபியவர்களும் சிலாகித்து சொல்கிறார்கள் என்றால், இங்கே சஹாபாக்களின் சிறப்பு அதிலும் குறிப்பாக அனஸ் இப்னு நள்ர்[ரலி][ அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்ட செய்தி நமக்கு புலப்படுகிறது.

மேலும், இந்த  அனஸ் இப்னு நள்ர்[ரலி] அவர்கள், உஹத் களத்திலே முஸ்லிம்களுக்கு தோல்விமுகம் கண்ட நேரத்தில், 'சுவனத்தின் வாசனையை நான் உஹது பள்ளத்தாக்கில் நுகர்கிறேன்'' என்று கூறியவர்களாக எதிரிகளின் கூட்டத்திற்குள் புகுந்து போரிட்டு வீர மரணம் அடைந்த ஒரு ஷஹீத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

  1. விபச்சாரத்தை,மதுவை ஒரு போக பொருளாக கருதாமல்,தங்கள் வாழ்வியலில் ஒரு அங்கமாக கருதிய அந்த கால மக்களில் சிலரை பிரித்து எடுத்து அவர்களின் உள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் நிலைபெற செய்து - புனிதர்களாய் மாற்றினார்கள் நமது தலைவர் அபுல்காசிம் (ஸல்) அவர்கள்.

    அந்த புனிதர்களின் வாழ்கையில் நடந்த அனைத்திலும் இறை சிந்தனையும் ,இறைதுதரின் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பும் வெளிப்பட்டது உண்மைதான்.

    அதைப்பற்றியே நாம் பேசி சிலாகிதிருபதில் என்ன பயன் - சில நேரங்களில் இந்த சிலகிப்பு கூட இணைவைப்பாக மாற வாய்ப்பு இருகின்றது.

    இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிக்கும் முறையை நாம் அந்த சஹாபா பெருமக்களிடம் இருந்து படிப்பதோடு நில்லாமல் அவர்களை போலவே நேசிக்க முற்படவேண்டும் - வஸ்ஸலாம்

    உங்கள் மார்க்க சகோதரன்
    முஜிப் ரஹ்மான் (பொதக்குடி)

    பதிலளிநீக்கு