விண்வெளி பயணம் மேற்கொள்ளலாம் என்று குர்ஆன் சொல்கிறது என்று கூறி அதற்கு ஆதாரமாக அர்ரஹ்மான் அத்தியாயத்தில் இடம் பெறும் மனித ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. என்ற வசனத்தை சிலர் காட்டுவதுண்டு. ஆனால் இந்த வசனத்தை அடுத்து வரும் வசனத்தை பாருங்கள்;
உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். (55:35)
முதல் வசனம் விண்வெளி பயணத்தை வலியுறுத்துவதாக இருந்தால் அடுத்த வசனம் உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். என்று முரணாக வருவது ஏன்? முதலில் வாங்க என்று சொல்லிவிட்டு பின்பு நீங்கள் விண்வெளிக்கு வந்தால் நெருப்புஜுவாலைகள் வீசப்படும் என்று முரணாக இறைவன் கூறுவானா?எனவே இது விண்வெளி பயணம் சம்மந்தமானது அல்ல. மறுமை சம்மந்தமானது என்பதற்கு பின்வரும் அதே அத்தியாயத்தின் வசனங்கள் சான்று பகர்கிறது;
فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:38)
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. (55:39)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:40)
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:42)
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). (55:43)
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். (55:44)
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:45 ]
இந்த வசனங்கள் கூறுவதென்ன..? மறுமையில் இறைவன் தண்டிக்க நாடும்போது அதிலிருந்து தப்பிக்க துணிவிருந்தால், மனித ஜின் வர்க்கமே வானம் பூமியின் எல்லைகளை கடந்து போய் பார். அப்போது உங்கள் மீது நரகத்தின் நெருப்பு ஜுவாலைகள் வீசப்படும் [எனவே தப்ப முடியாது]என்கிறான். ஆக மறுமை பற்றி சொல்லும் வசனங்களை விஞ்ஞானம் என்று நாம் விளங்கியதுதான் சகாபாக்களை மிஞ்சிய சிந்தனை போலும்.
அடுத்து சகாபாக்களை விட சகாபாக்களிடமிருந்து செவியுருபவர்கள் நன்கு பேணி பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்ற நபி[ஸல்] அவர்களின் வார்த்தையை காட்டி சகாபாக்களை விட நாம் சிந்தனையில் சிறந்தவர்கள் என்று காட்ட சிலர் முயற்ச்சிக்கிறார்கள். அந்த ஹதீஸ்;
இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (நேரடியாக)க் கேட்டவரை விட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு கர்ப்பவராயிருக்கலாம்.[புஹாரி]
இதில் நபி[ஸல்] அவர்கள் வந்தவர்கள் வராதவர்களுக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்கிறார்கள். வந்தவர்கள் யார்? சகாபாக்கள்! வராதவர்கள் யார் அன்றைய காலத்தில் வாழ்ந்த சகாபாக்கள்! ஆக சொல்பவரும் ஸஹாபி, அவரிடமிருந்து செவியேர்ப்பவரும் சகாபிகள். நபி[ஸல்] அவர்களின் போதனையை நேரடியாக கேட்ட சகாபாக்களை விட, இவரிடமிருந்து செய்தியை செவியுறும் ஸஹாபி இந்த செய்தியை நன்கு விளங்குபராக காப்பவராக இருக்கலாம் என்றுதான் புரிந்து கொள்ள முடியுமேயன்றி, சகாபாக்கள் தலைமுறைக்கு பின் சுமார் 14 தலைமுறைக்கு பின் வந்த நம்மை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது என்று கூறுவது சரியா? மேலும் சகாபாக்கள் சிலர் சிலரை விட சிறப்பாக விளங்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சான்று;
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் உமர்(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்த புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், 'எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி), 'இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வகை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது 'அந்நஸ்ர்') அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, 'இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், 'எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவிப்பதாகும். எனவே, 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள 'வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்'' என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 4294 ]
உமர்[ரலி] அவர்கள் மேற்கோள் காட்டி விளக்கம் கேட்ட வசனத்திற்கு மற்ற சகாபாக்கள் எல்லாம் நாம்மை போன்று அந்த வசனத்தின் நேரடிப் பொருளை கூறிக்கொண்டிருக்க இப்னு அப்பாஸ்[ரலி] அவர்களோ அந்த வசனத்தின் உள் அர்த்தத்தை விளக்குகிறார்கள் எனில், சகாபாக்கள் சிலர் சிலரை விட விளக்கமுடையவர்களாக இருந்திருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் நபி[ஸல்] அவர்கள், வந்தவர்களிடமிருந்து செவியுறுபவர்கள் சிறந்த முறையில் பேணுபவர்களாக இருக்கலாம் என்றார்கள்.
எனவே என்னதான் நவீன வசதிகளை பெற்றாலும், மார்க்கத்தை முழுமையாக கரைத்துக்குடித்தாலும் அந்த சகாபாக்களுக்கு மேலாக நாம் சிறந்தவர்களாக ஆக முடியாது என்பதே உன்மை.
அல்லாஹ் மிக அறிந்தவன்.